இதே போன்ற அறிக்கையை கடந்த முறையும் தாக்கல் செய்தீர்களே?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

இதே போன்ற அறிக்கையை கடந்த முறையும் தாக்கல் செய்தீர்களே?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம், இலவசமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது எனவும், இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 700 ஹெக்டேர் பரப்பில், 506 ஹெக்டேர் பரப்பில் இருந்த அந்நிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதே போன்ற அறிக்கையையே கடந்த முறையும் தாக்கல் செய்ததாக சுட்டிக்காட்டினர். அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் பணியை ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்க இரண்டு வாரங்கள் அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், நர்சரிகளில் அந்நிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in