மாணவனின் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சிவசங்கர் பாபா பதில் அளிக்க உத்தரவு!

மாணவனின் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சிவசங்கர் பாபா பதில் அளிக்க உத்தரவு!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டிருந்த  வழக்கை  ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர்  பாபா பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த ஒரு  மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக 2021-ல் புகார் பெறப்பட்டு,  சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான இந்த  வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில்  அதுகுறித்து எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாததை காரணம் காட்டி  சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 'இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.

இதனையடுத்து, மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in