நீர்நிலைப் பகுதியில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் ஒரு பகுதி, நீர்நிலைகளில் அமைந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த இடத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், அதற்கான தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. அத்துடன் நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில், அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில், ஆக்கிரமிப்பின் மீது 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், முதலில் சாஸ்த்ரா அக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள் வலியுறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு பொருந்தாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கின்ற கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in