நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகளை ஆய்வு செய்யலாம்: ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

எம்.என்.நம்பியார்
எம்.என்.நம்பியார்

மறைந்த நடிகர்  எம்.என்.நம்பியாரின் புகைப்படங்கள் , விருதுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது.

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேகலதா என்ற மகளும் உள்ளனர். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட பின் சுகுமாரன் காலமாகிவிட்ட நிலையில், சுகுமாரனின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

தனது தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், சபரிமலை மற்றும் ஐயப்பனின் ஓவியங்கள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட  பொருட்கள்  அத்தையின் வசம் உள்ளதாகவும்,  தனது அத்தை சினேகலதா நம்பியாருடன் ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் பொதுவாக வைத்திருந்ததாக சுட்டிக்காட்டி இருக்கிறார். 

அந்த பொருட்களை தனக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட தனது அத்தை சினேகலதா, தான் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகு, தற்போது தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அந்த பொருட்களை தன்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள் மற்றும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சினேகலதா நம்பியார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த  மனுவில் தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்குத்தான் சொந்தம் என்றும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கை  விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின்  உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in