நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்: பட்டியலின மாணவருக்குக் கிடைத்தது நீதி

நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்: பட்டியலின மாணவருக்குக் கிடைத்தது நீதி

நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு எழுதினார். அந்த தேர்வில் தவறான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் அந்த தேர்வில் அவர் 92 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

ஆனால் பட்டியலின மாணவர்களுக்கு கட் ஆஃப் மார்க் 93 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு மருத்துவம் பயில்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தவறான கேள்விகளுக்கு விடையளிக்காமல் தவிர்த்ததால், அதற்கு உண்டான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என நீட் தேர்வு முகமைக்கு மனு அனுப்பினார். அந்த மனு பரிசீலனை செய்யப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயகுமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தவறான கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதிலை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய முகமை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், “பட்டியலின மற்றும் பழங்குடியினர் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி,  பாதிக்கப்பட்ட மாணவருக்குக் கருணை மதிப்பெண்களாக நான்கு  மதிப்பெண்கள் வழங்க  உத்தரவிட்டது. மேலும்  மாணவருக்கு ஏற்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு மற்ற வழக்குகளுக்குப் பொருந்தாது" எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in