சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய் பணி ஓய்வு பெற்றார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 1996-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2011 நவம்பர் மாதம் குஜராத் உயர் நீதிமன்ற கூடுதல் நியமிக்கப்பட்ட அவர் 2013-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இன்றுடன்  62 வயது நிறைவடையதை அடுத்து நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஓய்வு பெற்றார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைந்த நிலையில் காலி இடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் 2,533 வழக்குகளுக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய் தீர்வு கண்டுள்ளதாக கூறினார்.

நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி பரேஷ் உபாத்யாய், "வாழ்க்கையின் பல பயணங்களில் ஒன்று தான் தாம் நீதிபதியாக இருந்தது. தமிழகத்தில் இருந்தது மிகவும் மகிழ்ச்சி. ஒரு வழக்குகளில் கூட மொழி மாற்றம் செய்ய கோரவில்லை. ஆசிரியர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியருக்கு 'நன்றி அம்மா' " என தமிழில் நீதிபதி பரேஷ் உபாத்யாய் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். தொடர்ந்து அவர், “கடைநிலையில் இருக்கும் ஒரு ஏழைக்கு நீதி கிடைப்பதற்காக தாம் எந்த அளவுக்கும் வளைந்து கொடுக்க தயாராக இருந்தேன்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் நீதிபதி பரேஷ் உபாத்யாய்க்கு  வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின்  எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ் மீது நீங்கள் வைத்திருந்த பற்றுக்கு நன்றி. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பங்களிப்பு அளித்ததற்கும் நன்றி. சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதியாக தாங்கள் இருந்த 15 மாதங்களில் தமிழக மக்கள் பலனடைந்தனர்" என்று ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in