
மும்பையை சேர்ந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துக்கு எதிரான விசாரணையில், கடும் நடவடிக்கை கூடாது என்று சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு என்ற போர்வையில், சூதாட்ட செயலிகள் அதில் ஈடுபடுவோரை தற்கொலையில் தள்ளி வருகின்றன. இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியால் சென்னையில் நிகழ்ந்த சில கொலை மற்றும் தற்கொலைகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் அங்கமாக ’கேம்ஸ்24x7’ என்ற ஆன்லைன் நிறுவனத்துக்கு சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
மும்பையை பின்புலமாக கொண்ட கேம்ஸ்24x7 நிறுவனம், சிபிசிஐடி விசாரணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான தங்களது வருமானம் உள்ளிட்ட உள்தகவல்களை கோரும் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்குமாறு கேம்ஸ்24x7 கோரியது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்த நிலையில், சிபிசிஐடி தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், ஏராளமான ஆவணங்களை சரிபார்த்து பதிலளிக்க வேண்டி உள்ளதால் அதற்கு 2 வார அவகாசம் கோரினார்.
இதற்கு தங்கள் தரப்பை பதிவு செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வழக்கறிஞர், அந்த அவகாச காலம் முடியும் வரை கேம்ஸ்24x7 நிறுவனத்துக்கு எதிரான சிபிசிஐடி விசாரணையில் கடுமை காட்டக்கூடாது என உத்தரவிடக் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 28க்கு அடுத்த விசாரணையை ஒத்தி வைத்ததுடன் அதுவரை, கேம்ஸ்24x7 மீதான சிபிசிஐடி விசாரணையில் கடுமை கூடாது என உத்தரவிட்டனர்.