‘அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்றே ஆடைகளைக் களைந்தோம்!’

‘அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்றே ஆடைகளைக் களைந்தோம்!’

மத்திய பிரதேசத்தின் சீதீ மாவட்டத்தில், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 30 பேர் காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக நிற்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குக் காவல் துறையினர் தெரிவித்த காரணமும் சர்ச்சையாகியிருக்கிறது.

புகழ்பெற்ற ஆளுமைகளையும் அரசியல் தலைவர்களையும் பெண்களையும் அவதூறு செய்ததாக, நீரஜ் குந்தர் எனும் நபரை சமீபத்தில் போலீஸார் கைதுசெய்தனர். சமூகவலைதளத்தில் போலி கணக்கைத் தொடங்கி இவ்வாறு அவர் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து அவரது நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 30 பேர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக நிற்கவைக்கப்பட்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. முதலில், அவர்களில் பலர் பத்திரிகையாளர்கள் எனத் தகவல்கள் வெளியாகின. முழு நிர்வாணமாக நிறுத்திவைக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

இந்தச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோஜ் சோனி, “அந்தப் படத்தில் இருக்கும் அனைவரும் பத்திரிகையாளர்கள் அல்ல. ஒரே ஒருவர்தான் பத்திரிகையாளர். அவர் ஒரு யூடியூபர். மற்றவர்கள் கைதுசெய்யப்பட்ட நீரஜ் குந்தரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். காவல் துறையினருக்கும் அரசு நிர்வாகத்துக்கும் எதிராகப் போராட்டம் நடத்த அவர்கள் முயன்றனர்” என்றார்.

அவர்கள் அனைவரும் அரை நிர்வாணமாக நிறுத்திவைக்கப்பட்டது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, “அது அவர்களின் பாதுகாப்புக்காகச் செய்ததுதான். ஆடைகளைப் பயன்படுத்தி அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கவே அப்படி நிறுத்திவைத்தோம்” என அவர் பதிலளித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in