
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா, தனது முன்னாள் மாணவனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தின் சிம்ரோல் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிஎம் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விமுக்தா சர்மா(54). திங்கள்கிழமை அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா (24) என்பவர், விமுக்தா சர்மாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பகவத் சிங் விர்டே தெரிவித்தார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை, இன்று காலையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜூலையில் தான் தேர்ச்சி பெற்ற பி.பார்ம் தேர்வின் மதிப்பெண் பட்டியலை பி.எம் கல்லூரி அதிகாரிகள் தனக்கு கொடுக்கவில்லை, அதனால்தான் இந்த செயலை செய்தேன் என்று ஸ்ரீவஸ்தவா விசாரணையின் போது போலீஸாரிடம் தெரிவித்தார். ஸ்ரீவஸ்தவா, கல்லூரி முதல்வரை கல்லூரி வளாகத்தில் தீ வைத்து எரித்ததால் அவர் 80 சதவீதம் தீக்காயம் அடைந்தார். திங்களன்று கைது செய்யப்பட்ட குற்றவாளி, தற்போது போலீஸ் காவலில் உள்ளார். சதி செய்து கொடூரமான குற்றத்தைச் செய்ததற்காக ஸ்ரீவஸ்தவா மீது மாவட்ட நிர்வாகம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.