இந்திய தேசியக்கொடியில் `மேட் இன் சீனா'- வெடித்தது சர்ச்சை

இந்திய தேசியக்கொடியில் `மேட் இன் சீனா'- வெடித்தது சர்ச்சை

கனடாவில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய தேசியக்கொடியில் `மேட் இன் சீனா' என்று இருந்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வேதனை தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு கடந்த 22-ம்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பல மாநில சட்டமன்ற பேரவை தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், மாநாட்டில் இந்திய தேசியக்கொடியில் `மேட் இன் சீனா' என்று இருந்தது. இது குறித்து மக்களவை சபாநாயகரிடம் அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அவர் சிரிப்பையே பதிலாக அளித்துள்ளார். தற்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இது குறித்து கூறுகையில், "மாநாட்டில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் அனைத்து மாநில சபாநாயகர்களும் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு சென்றோம். கையில் இருந்த கொடியை நாங்கள் பார்த்தபோது `மேட் இன் சீனா' என்று இருந்தது. இதுகுறித்து அனைத்து சபாநாயகர்களும் மக்களவை சபாநாயகரிடம் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே வந்தார். அனைவருக்கும் வேதனையாக இருந்தது. சீனாவில் இருந்து தேசியக்கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டில் கரூர், சிவகாசி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிக பிரஸ் இருக்கிறது. இரவில் சொன்னால் காலையில் நூறு கோடி கொடியை அவர்களால் அடித்து தர முடியும். சீனாவில் இருந்து நாம் தேசியக்கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏன்? ஏற்பட்டது. தேசியக்கொடியின் அளவு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வருகிறது. சீனா நமக்கு எதிரான நாடு. அந்த நாட்டு அதிபர் மகாபலிபுரம் வந்தார். பாதுகாப்பு கொடுத்து நல்ல மரியாதையாக அனுப்பிவைத்தோம். அடுத்த பத்து நாளில் நம்முடைய இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் 20 பேரை கொன்று குவித்ததை மறக்கமுடியவில்லை. சீனாவின் பெயரோடு நம்முடைய தேசியக்கொடியை தாங்கிச் சென்றது வேதனையாக இருக்கிறது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in