
தெற்கு மும்பையின் வால்கேஷ்வரில் மேக்ரோடெக் டெவலப்பர்களின் ‘லோதா மலபார் பேலசஸ் பை தி சீ’ என்ற கட்டுமானத் திட்டத்தில், ரூ.252.5 கோடிக்கு கடலை பார்க்கும் வகையில் அமைந்த சொகுசு டிரிப்ளெக்ஸ் பென்ட்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் நிராஜ் பஜாஜ் வாங்கியுள்ளார்.
நிராஜ் பஜாஜ் வாங்கிய இந்த சொகுசு குடியிருப்பு, கவர்னர் தோட்டத்திற்கு எதிரே உள்ள வால்கேஷ்வர் சாலையில் அரபிக் கடல் மற்றும் தொங்கும் தோட்டம் இரண்டிற்கும் அருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆடம்பர பங்களா 18,008 சதுர அடியில் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது, இதில் எட்டு கார் பார்க்கிங் வசதிகளும் உள்ளது. 31 தளங்களைக் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 29, 30 மற்றும் 31வது தளங்களில் நிராஜ் பஜாஜின் வீடு உள்ளது.
நிராஜ் பஜாஜ் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புக்கான முத்திரைத் தொகை மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.15.15 கோடி என சொத்து பதிவு ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், மேக்ரோடெக் டெவலப்பர்களின் அலுவலகம் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
கடந்த பிப்ரவரியில், வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்காவும் ஓபராய் ரியாலிட்டியின் சொகுசுத் திட்டமான த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் அட் வோர்லியில் ஒரு பென்ட்ஹவுஸை 230 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதேபோல், டிமார்ட்டை நடத்தும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் நிறுவனர் ராதாகிஷன் தமானி சுமார் 1,238 கோடி ரூபாய்க்கு 28 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது, இது சமீபத்தில் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.