காரில் சிக்கி 4 கி.மீ இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண்: டெல்லியில் வெடித்தது போராட்டம்

காரில் சிக்கி 4 கி.மீ இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண்: டெல்லியில் வெடித்தது போராட்டம்

டெல்லியில் காரில் சிக்கி 4 கி.மீ தூரம் இழுத்துச்செல்லப்பட்டு 20 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் லெப்டினன்ட் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் பதவி விலகக் கோரி, அவரின் அலுவலகம் முன்பு திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்த காரணத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல இச்சம்பவம் நடைபெற்ற சுல்தான் புரி காவல்நிலையம் முன்பு திரண்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். இதுபோல டெல்லியில் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. டெல்லியில் காவல்துறை என்பது மத்திய அரசின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி என்ற பெண் வடமேற்கு டெல்லியில் உள்ள அமன் விஹாரில் வசித்து வந்தார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தபோது அவர்மீது கார் ஒன்று மோதியது. அப்போது அப்பெண்ணின் கால் காரில் சிக்கியது, இதனையடுத்து அப்பெண் சுமார் 4 கி.மீ இழுத்துச்செல்லப்பட்டார். அப்போது சுல்தான்பூரில் இருந்து குதுப்கர் பகுதி நோக்கிச் சென்ற காரில் ஒரு பெண் இழுத்துச்செல்லப்படுவதாக போலீஸாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காரில் இருந்து 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ள கருத்தில், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் மிட்டல் பாஜக உறுப்பினர். ஆனால் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளனர்” என குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரிக்க, குற்றவாளிகளை 3 நாள் காவலில் வைக்க டெல்லி ரோகினி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. டெல்லி போலீசார் 5 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "கஞ்சவாலா சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநரிடம் பேசினேன். குற்றவாளிகளுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் மீது ஐபிசியின் கடுமையான பிரிவுகள் பதியப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு உயர் அரசியல் தொடர்புகள் இருந்தாலும் தயக்கம் காட்டக்கூடாது என தெரிவித்தேன். அவரும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வெட்கித் தலைகுனிவதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ட்வீட் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in