சித்திரைத் திருவிழாவுக்கு அறிவித்தபடி தண்ணீர் திறக்கப்பட்டதா? - பக்தர்கள் ஏமாற்றம்

வைகை ஆறு
வைகை ஆறுமதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரைத்திருவிழாவுக்கு வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், மதுரை ஆற்றில் கரைபுரண்டு ஓடாமல் குறைந்தளவே வந்ததால் அணையில் இருந்து ஆற்றில் பொதுப்பணித்துறை அறிவித்தப்படி தண்ணீர் திறந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை 5ம் தேதி நடக்கிறது. வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த திருவிழாவுக்காக வைகை அணையில் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. வைகை அணையின் மொத்த அடியான 71 அடியில் தற்போது 53 அடி தண்ணீர் இருப்பு உள்ளதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து கடந்த 30ம் தேதி காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 750 கனஅடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலப்பரப்பு ஈரப்பதத்துடன் இருந்ததால் வைகை அணையில் திறந்துவிட்ட தண்ணீர் அப்படியே வந்திருக்க வேண்டும். கடந்த காலத்தில் இதுபோல் சித்திரைத்திருவிழா நேரத்தில் தண்ணீர் திறந்தால் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி இரைச்சல் சத்தத்துடன் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். மக்கள், வழிநெடுக ஆற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கைப்பார்க்க திரள்வார்கள். போலீஸார், ஆற்றில் யாரும் இறங்கி மூழ்காமல் இருக்க, ஆற்றங்கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், வைகை அணை தண்ணீர் நேற்று முன்தினம் மதுரை வந்தடைந்தும், ஆற்றில் தண்ணீர் கடந்த காலங்களை போல் கரைபுரண்டு ஓடவில்லை. சாதாரண மழைக்கால நீரோட்டம் போல் குறைந்தளவு தண்ணீரே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், ஆற்றில் சிறுவர்கள், இளைஞர்கள் குளிக்க முடியவில்லை. வைகை அணை தடுப்பு பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில்தான் மொட்டையடித்தவர்கள் நீராட முடிந்தது.

பொதுப்பணித்துறையினர், வைகை அணையில் இருந்து முதல் இரண்டு நாட்கள் வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரை அளவை படிப்படியாக குறைத்து 5ந்தேதி காலையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து மொத்தம் 216 மில்லியன்கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். ஆனால், ஆற்றில் குறைந்தளவு தண்ணீரே வருவதால் பொதுப்பணித்துறையினர் அறிவித்தப்படி வைகை அணையில் இருந்து சித்திரைத்திருவிழாவுக்கு தண்ணீரை திறந்துவிட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வைகை ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் வந்ததால் இந்த முறை ஆற்றின் மையப்பகுதியில் பந்தல் அமைக்க திண்டு போன்ற அமைப்பே ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆற்றின் சம நிலப்பரப்பிலே விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், ‘‘இந்த முறை ஒரே அளவாக தண்ணீரை திறந்துவிடாமல் அணையில் இருந்து 8 முறை குறைத்துக் கூட்டி தண்ணீரை வெளியேற்றினோம். அதனால், இரு கரையும் தொட்டபடி தண்ணீர் வரவில்லை. தண்ணீரின் வேகமும் தெரியவில்லை. முதல் நாள் 750 கன அடி திறந்துவிட்டோம். ஆனால், ஆற்றின் நீரோட்ட வடிநில பகுதிகள் நீண்ட நாள் தண்ணீர் வராமல் காய்ந்து கிடந்ததால் தண்ணீரை பூமி உள்ளே இழுத்துவிட்டது. அதனால், மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் குறைவாக தண்ணீர் வந்ததுபோல் தெரியும். ஆனால், அரசு உத்தரவு என்பதால் அறிவித்தப்படி அனைத்து தண்ணீரையும் திறந்துவிட்டுட்டோம்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in