காதலர்கள் மரிக்க காரணமான பெற்றோர்: சிலை வடித்து மணம் முடித்த வினோதம்!

காதலர்கள் மரிக்க காரணமான பெற்றோர்: சிலை வடித்து மணம் முடித்த வினோதம்!

வாழ்க்கையில் ஒன்று சேரத் துடித்த காதலர்களுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், அந்த வேதனையில் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும், சிலை வடித்து, மணம் முடித்து, மனம் ஆறி இருக்கிறார்கள்.

இந்த வினோத சம்பவம் குஜராத் மாநிலம் தாப்பி மாவட்டத்தில் நடந்தேறி இருக்கிறது. கணேஷ் - ரஞ்சனா இருவரும் உறவினர்கள் என்ற போதும், நெருங்கிய உறவுகளுக்குள் மட்டுமே மணம் முடிக்கும் மக்களின் வழக்கத்தால், தூரத்து காதலுக்கு எதிர்ப்பு நிலவியது. இருவரும் தத்தம் பெற்றோரிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் மசிந்தபாடில்லை.

காதலர்களின் விருப்பத்துக்கு மாறாக இருவருக்கும், அவரவர் நெருங்கிய உறவுகளில் வரன் பார்க்க வறட்டு பெற்றோர் முயன்றனர். இதனால் மனம் வெறுத்த காதலர்கள், ஒருமனதாக முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டனர். பிள்ளைகளின் சாவுக்குப் பின்னரே அவர்களின் காதலின் ஆழம் பெற்றோருக்கு உறைத்தது.

அதுவரை முறைத்துக்கொண்டிருந்த பெற்றோர் ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டித்தனர். அவசரப்பட்டுவிட்டோமே என்று அனுதினம் விசனத்தில் ஆழ்ந்தனர். விமோசனத்துக்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.

அவற்றில் ஒன்றாக, வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத காதலர்களின் ஆசையை, அவர்கள் மரித்த பிறகு நிறைவேற்ற துடித்தனர். அதன்படி கணேஷ் - ரஞ்சனா ஜோடிக்கு அச்சு அசலாய் மார்பளவு சிலை வடித்தனர். கடந்த ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடிகளுக்கு, சரியாக ஆறு மாதம் கழித்து அவர்களின் சிலைகளுக்கு மணம் முடித்து மனம் ஆறினர்.

உயிரோடு இருந்தபோது காதலை அலட்சியம் செய்தவர்கள், கல்லான பிறகு கல்மனம் கரைந்திருக்கின்றனர். காதலர்களின் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் அந்த உதாசீன பெற்றோர் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in