காதலியா, உளவாளியா? பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பெண்ணின் பின்னணியில் புதிர்!

இக்ரா ஜிவானி - முலாயம் சிங்
இக்ரா ஜிவானி - முலாயம் சிங்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய இளைஞனை மணந்து, பெங்களூருவில் வாழ்ந்து வந்ததை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. பாகிஸ்தான் பெண்ணின் பின்னணியில் மறைந்திருப்பது உளவா அல்லது காதலா எனவும் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் இக்ரா ஜிவானி(19). இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் முலாயம் சிங் யாதவ்(25). இந்த இருவரும் ஆன்லைன் விளையாட்டு ஒன்றின் வாயிலாக அறிமுகமானார்கள். இருவர் மத்தியில் ஈர்ப்பு அதிகரிக்கவே அங்கிருந்து பின்னர் டேட்டிங் ஆப் ஒன்றுக்கு தாவி, அதன் வாயிலாக காதலை வளர்த்தார்கள். பாகிஸ்தான் பெண் - இந்திய ஆண் இடையிலான காதல், அதற்கான சவால்களை அறிந்திருந்தும் அவற்றை பொருட்படுத்தாது வளர்ந்தது.

ஆன்லைனில் செழித்த காதலை ஆஃப்லைனிலும் தொடர முடிவு செய்தனர். இருவரும் ஒரே தேசத்தில் வாழ்வதென்றும், இதற்காக எவரேனும் ஒருவர் எல்லை தாண்டுவதென்றும் முடிவானது. பாகிஸ்தானுக்கு செல்ல முலாயம் சிங் தயங்கியதில், இக்ரா ஜிவானி துணிந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முன்வந்தார். அதன்படி பாகிஸ்தானிலிருந்து நேபாளம் வந்த இக்ரா, முலாயமையும் அங்கே வரவழைத்தார். இருவரும் நேபாளத்தில் மணமுடித்தனர்.

நேபாளத்திலிருந்து இந்திய எல்லைக்குள் தரைமார்க்கமாக ஊடுருவிய இருவரும், பிஹார் மாநிலத்தில் சில நாட்கள் போக்கினர். பின்னர் பெங்களூருவுக்கு வந்தனர். அங்கே செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் முலாயமுக்கு வேலை கிடைக்க, இக்ரா ஜிவானியின் பெயரை ராவா யாதவ் என்ற அறிமுகத்துடன் பெல்லத்தூர் பகுதியில் குடியேறினார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டு கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் வசித்துவந்த இளம் ஜோடி குறித்து அண்டை அயலார் மத்தியில் சந்தேகம் எழவில்லை. இக்ராவுக்கு ஆதார் அட்டை வாங்கியதுடன் அதன் அடிப்படையில் பாஸ்போர்டுக்கும் முலாயம் விண்ணப்பித்திருந்தார்.

இதனிடையே பாகிஸ்தானில் இருக்கும் தனது குடும்பத்தினருடன் இக்ரா ஜிவானி அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டிருக்கிறார். இவை இந்திய புலனாய்வு அமைப்புகளின் கண்களை உறுத்தவே, பெங்களூரு போலீஸார் உதவியுடன் முலாயம் சிங் - இக்ரா ஜிவானியை கைது செய்துள்ளனர். இக்ரா - முலாயம் இருவரும் தெரிவித்த காதல் பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இக்ரா ஜிவானி வசமிருந்த போலி ஆவணங்களை கைப்பறியதுடன், அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் பின்னணி குறித்தும் துழாவி வருகின்றனர். இக்ரா ஜிவானி துணிந்து எல்லை தாண்டியது, நேபாளுக்கு முலாயமை வரவழைத்தது முதல் பெங்களூருவில் குடியேறியது வரை இக்ராவை செலுத்தியது காதலா அல்லது அவர் பின்னணியிலான பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் கைங்கரியமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in