டிவி நடிகை தற்கொலையில் வெடிக்கும் ‘லவ் ஜிஹாத்’ சர்ச்சை

நடிகையின் காதலன் கைது
டிவி நடிகை தற்கொலையில் வெடிக்கும் ‘லவ் ஜிஹாத்’ சர்ச்சை

பாலிவுட் சினிமா மற்றும் டிவி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை வழக்கில், மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் ’லவ் ஜிஹாத்’ புகாரை எழுப்பியுள்ளார். மேலும் நடிகையின் காதலனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் நடித்து புகழ் பெற்றவர் துனிஷா சர்மா. இந்தி சினிமா மட்டுமன்றி டிவி தொடர்கள் பலவற்றிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனிடையே சனியன்று, மகாராஷ்டிர மாநிலம் வசாய் பகுதியில் அமைந்துள்ள படப்பிடிப்பு அரங்கு ஒன்றில் துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பங்கேற்ற தொடரின் படப்பிடிப்புக்கு மத்தியில் இவ்வாறு துயர முடிவினை தேடிக்கொண்டார்.

வளரும் நடிகை ஒருவர், தனது 20 வயதில் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டின் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இயங்கும் துனிஷா சர்மா, இன்ஸ்டாகிராமில் நேர்மறை கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெறுவார். அவரது தற்கொலை நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு முன்பும் அவ்வாறே தனது புகைப்பட்டத்தை பதிவிட்டு அதனுடன் நேர்மறை வாசகங்களை வெளியிட்டிருந்தார். இதனால் துனிஷா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கொதித்தனர்.

ஆனால், காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில் துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டிருப்பதாக உறுதி தெரிவிக்கின்றனர். இதனிடையே துனிஷா சர்மாவும் சக நடிகர் ஒருவரும் காதலித்து வந்ததாகவும், 2 வாரங்களுக்கு முன்னர் இந்த காதல் முறிந்துபோனது தொடர்பாக துனிஷா துயரத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் துனிஷாவின் தாயார் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணையில் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஷீஜன் முகமது கான் என்ற நடிகரை போலீஸார் கைது செய்தனர். துனிஷா பங்கேற்பில் பிரபலமான ’அலிபாபா தஸ்தான் இ காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உடன் நடித்தபோது ஷீஜனுடன் காதல் வயப்பட்டிருந்தார் துனிஷா. ஆனால் இவர்களின் காதல் அண்மையில் முறிந்துபோனது. இதற்கிடையே மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக மாநில தலைவர்களில் ஒருவருமான கிரிஷ் மஹாஜன் என்பவர், துனிஷா சர்மா தற்கொலையில் ’லவ் ஜிஹாத்’ புகாரை கிளப்பியுள்ளார்.

”லவ் ஜிஹாத் மோசடியை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றுடன் நடிகர் ஹீஜன் கான் தொடர்பில் உள்ளார். திட்டமிட்டு அவர் துனிஷா சர்மாவை காதலில் வீழ்த்தியதோடு பின்னர் பலவகைகளில் துனிஷாவை பிளாக்மெயில் செய்துள்ளார். எனவே ஷீஜன் கானை லவ் ஜிஹாத் அடிப்படையிலும் போலீஸார் விசாரிக்க வேண்டும். முதல்வர் ஷிண்டே தலைமையிலான அரசு மகாராஷ்டிராவில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை விரைவில் கொண்டுவரும்” என கிரிஷ் மஹாஜன் தெரிவித்துள்ளார்.

ஆனால் காவல்துறை தரப்பில் ’துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணையில் இதுவரை லவ் ஜிஹாத்துக்கான முகாந்திரங்களோ, பிளாக்மெயில் நடவடிக்கைகளுக்கான தடயமோ கிடைக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர். ஷீஜன் கானை கைது செய்த போலீஸார், நீதிமன்றம் வாயிலாக 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in