பள்ளி பருவத்தில் மலர்ந்த காதல்; எதிர்ப்பு தெரிவிக்காத பெற்றோர்கள்: ஆனாலும் விபரீத முடிவெடுத்த இளம்ஜோடி

பள்ளி பருவத்தில் மலர்ந்த காதல்; எதிர்ப்பு தெரிவிக்காத பெற்றோர்கள்: ஆனாலும் விபரீத முடிவெடுத்த இளம்ஜோடி

நாகர்கோவிலில் ஒரே சேலையில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலி வீட்டிற்கு வந்து, காதலன் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது உள்ளிட்டத் தகவல்கள் மர்மமாகவே இருப்பதால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. டீக்கடையில் வேலைசெய்து வந்த இவரது கணவர் செல்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முத்துலெட்சுமி தன் இளைய மகள் உமா கவுரி(20) உள்பட இரு மகள்களுடன் நாகர்கோவில், சிதம்பர நகர் பகுதியில் வசித்து வந்தார்.

முத்துலெட்சுமி ஜவுளிக்கடையிலும், உமா கவுரியும், அவரது சகோதரியும் மால் ஒன்றிலும் வேலைசெய்து வந்ததால் வேலைக்குச் சென்றுவர வசதியாக இவர்கள் மூவரும் நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தனர். நேற்று மாலையில் வழக்கத்தைவிட சீக்கிரமே வேலையில் இருந்து வந்த உமா கவுரி வீட்டில் இருந்தார். திடீரென வீட்டிற்குள் இருந்து பயங்கர சத்தம் கேட்கவே, அக்கம் பக்கத்தினர் போய்ப் பார்த்தனர். அப்போது ஒரே சேலையில் வாலிபரும், உமா களரியும் தூக்குப்போட்டுத் தொங்கியபடி சடலமாகக் கிடந்தனர். இதுகுறித்து உமா கவுரியின் தாய் முத்துலெட்சுமி, அவரது மூத்த சகோதரி ஆகியோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கோட்டாறு போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், உமா கவுரியுடன் தூக்கில் தொங்கிய வாலிபர் மருங்கூர் இசக்கி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆபத்துகாத்தான் மகன் வேணுமோகன் என்பது தெரியவந்தது. இவர் லேப் டெக்னீசியன் படிப்பில் இறுதியாண்டு படித்துவருகிறார். உமா கவுரியும், வேணுமோகனும் பள்ளிக்காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். வழக்கமாக பணிமுடிந்து இரவு வீடு திரும்பும் உமா கவுரி நேற்று மாலையே வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்க்க வீட்டிற்கு வேணுமோகனும் வந்தார். வீட்டில் ஒரு சேரும் உடைந்துகிடந்தது. இதனால் காதலர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் நடந்து, தவறான முடிவை எடுத்திருக்கக்கூடும் என்னும் கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், காதல் ஜோடிகளான உமா கவுரியும், வேணுமோகனும் வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் பள்ளிக்காலத்தில் இருந்தே இவர்களின் காதல் தொடர்ந்துவருவதால் இருவீட்டிலும் பெரிய எதிர்ப்பு இல்லை. இருந்தும் உறவுகள் யாரேனும் எதிர்த்து, அதற்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in