நொடிப்பொழுதில் 20 ஆயிரம் அபேஸ்; பணத்தில் ஆடம்பர வாழ்க்கை: சிக்கிய காதல் ஜோடி

நொடிப்பொழுதில் 20 ஆயிரம் அபேஸ்; பணத்தில் ஆடம்பர வாழ்க்கை: சிக்கிய காதல் ஜோடி

நூதன முறையில் பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிய காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்காக மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் வின்சென்ட் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நாகராஜன் சென்டருக்கு இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அவர், நண்பர் ஒருவரின் நம்பருக்கு உடனடியாக 20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய நாகராஜனும் அந்த பெண் சொன்ன நம்பருக்கு 20,000 ரூபாயை அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து, நாகராஜனுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பேடிஎம் மூலம் அனுப்பியதைப் போன்று ஒரு ஸ்கிரீன்ஷாட்டை காட்டிவிட்டு அந்தப் பெண் அங்கு தயாராக இருந்த வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுவிட்டார். இதையடுத்து, தனது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிட்டதாக என்று நாகராஜ் செக் செய்துள்ளார். ஆனால், பணம் வரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன் உடனே சேலம் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பெண் பணம் அனுப்ப சொன்ன செல்போன் நம்பரை வைத்து விசாரித்தனர். அப்போது, அந்த நம்பர் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியை சேர்ந்த எட்வின் தாமஸ் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த நம்பரை வைத்து காவல்துறையினர் விசாரித்த போது சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்து காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷெரில் ஏஞ்சல் என்ற பெண் உதவியுடன் 20 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் சென்னையில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படித்த போது காதல் ஏற்பட்டுள்ளது. ஷெரில் ஏஞ்சல் இதே பாணியில் பணம் அனுப்பி வைத்து மோசடி செய்து அந்த பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை காவல் எடுத்து விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in