கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்: இளம்ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர்!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்: இளம்ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர்!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமணம் செய்து வைத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த காப்பகத்தில் மகேந்திரன், தீபா இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. இவர்கள் இருவரும் குணமடைந்ததையொட்டி தங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மனநல காப்பக நிர்வாகத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி காதல் ஜோடி இருவருக்கும் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று காப்பகம் முன்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், மனநல காப்பகம் தனது 225 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக மகேந்திரன்- தீபா எனும் இரு பிணியாளிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. பிணியாளர்களை பேணி காப்பதில் நமது காப்பகம் முன்னோடியாக சிறப்புடன் செயல்பட்டு வருவதை இந்நிகழ்வு உலகிற்கு பறைசாற்றியிருக்கிறது. மணமக்களை வாழ்த்த வருகை தரும் சுகாதார அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியவை வருக வருக என வரவேற்கிறோம். வாழ்க மணமக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in