ஹிஜாப், ஹலாலைத் தொடர்ந்து பாங்கு: சர்ச்சைகளுக்கு எப்படி முடிவுகட்டுவது?

ஹிஜாப், ஹலாலைத் தொடர்ந்து பாங்கு: சர்ச்சைகளுக்கு எப்படி முடிவுகட்டுவது?

முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை தொழுவதை உலகம் முழுவதிலும் தம் முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்தத் தொழுகைக்குச் சற்று முன்பாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் ’அஸான்’ எனும் பாங்கு முழக்கத்தை ஓலிபெருக்கிகளில் ஒலிப்பதும் பல காலமாகத் தொடர்கிறது. இதுவே இந்துத்துவாவின் அரசியல் கொள்கைக்கானப் புதிய ஆயுதமாகி பிரச்சினை உருவாகத் தொடங்கிவிட்டது.

இந்தத் தொழுகைக்காக ஒலிபெருக்கிகளில் பாங்கு முழக்கத்திற்கு எதிராக எப்போதாவது ஒரு முறை ஆங்காங்கே சிறிய அளவில் எதிர்ப்புகள் கிளம்புவது உண்டு. ஆனால், இதுவரையும் அந்த எதிர்ப்புகளை எந்த ஒரு மாநில அரசும், பொதுமக்களும் பெரிதாகக் கருதவில்லை. மாறாக, மதநல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அப்புகார்களைப் புறக்கணித்தனர். சில ஆண்டுகள் முன் பாலிவுட் பாடகர் சோனு நிகாம் மும்பையில் பாங்குக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். இது செய்திக்கான சர்ச்சையானதே தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதேபோல உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த வருடம் மார்ச் மாதம் இதுதொடர்பான சர்ச்சை எழுந்தது. அங்குள்ள அலகாபாத் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவாத்ஸவா, விடியலின் முஸ்லிம்கள் பாங்கு முழக்கத்தை ஒலிபெருக்கியில் நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் பானுசந்த் கோஸ்வாமியிடம் மனு அளித்தார். தான் வாழும் குடியிருப்புப் பகுதியில் எழும் இந்த பாங்கு ஒலியால், தனது உறக்கம் கெடுவதுடன் தனது உடல்நலனில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தம் புகாரில் குறிப்பிட்டார். தான் எந்த ஒரு மதம் அல்லது பிரிவுக்கும் எதிரானவர் அல்ல எனவும், விடியலின் பாங்கை மட்டும் ஒலிபெருக்கி இன்றி அறிவித்தால் நல்லது என்றும் தன் கடிதத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து அலகாபாத் பல்கலைகழகத்தின் ஒரு பகுதி மாணவர்கள், பேராசிரியர் சங்கீதாவின் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு காட்டினர். எனினும், அது பெரிய அளவிலான பிரச்சினையாக வெடிக்கவில்லை. இந்தச் சூழலில், தென்னிந்தியாவின் இந்துத்துவ அரசியல் முன்னிறுத்தப்படும் ஒரே மாநிலமான கர்நாடகத்தில், பாங்கு முழக்கம் பிரச்சினையானது. அம்மாநிலத்தில் ஹிஜாப், ஹலால் சர்ச்சைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் கையில் எடுக்கப்பட்ட பாங்கு பிரச்சினை தற்போது இதர மாநிலங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது.

மகாராஷ்டிரத்தில் இந்துத்துவா, மண்ணின் மைந்தர் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி அரசியலில் தோல்வி கண்ட ராஜ் தாக்கரே இதைக் கையில் எடுத்தார். மகராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவரான அவர், குடி பர்வா எனும் மராட்டியப் புத்தாண்டு தினமான மார்ச் 2 ல் பாங்கு முழக்கத்தின் ஒலிபெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மே 3-ம் தேதிக்குள் அனைத்து மசூதிகளிலும் ஒலிபெருக்கிகளை அகற்ற அவர் கெடு விதித்துள்ளார். தவறினால் தனது கட்சியினர் அனைத்து மசூதிகளின் முன்பாக ஒலிபெருக்கிகளை அமைத்து அனுமன் மந்திரங்களை ஓதத் தொடங்குவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால், மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால் மதநல்லிணக்கம் குலைந்துவிடக் கூடாது என சிவசேனா தலைமையிலான அரசு கவலை கொண்டுள்ளது. இதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் பலனளிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, மும்பையின் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பினர், ராஜ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். “எங்களை சீண்டினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். முடிந்தால் ஒரு ஒலிபெருக்கியைத் தொட்டுப் பாருங்கள். பிறகு பிஎப்ஐ களத்தில் இறங்கும்” மும்பையின் பிஎப்ஐ தலைவர் அப்துல் மதீன் ஷெக்கானி எச்சரித்துள்ளார்.

இதையடுத்து மும்பையின் பி-1 காவல் நிலையத்தில் அப்துல் மதீன் மீது ஐபிசி 188-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. இப்பிரச்சினை தற்போதைக்கு அடங்கியிருந்தாலும் அது, மீண்டும் மே 3-ம் தேதி பின் கிளம்பும் என எதிர்நோக்கப்படுகிறது.

டெல்லி பாஜக தலைவர் மோஹித் கம்போஜ்
டெல்லி பாஜக தலைவர் மோஹித் கம்போஜ்

இதற்கிடையே டெல்லியின் பாஜக தலைவர்களில் ஒருவரான மோஹித் கம்போஜ், “நாட்டின் எந்தப் பகுதியிலும் அனுமன் மந்திரம் ஓதுபவர்களுக்கு ஒலிபெருக்கிகள் இலவசம்” எனக் கூறி பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறார். இதைச் சமாளிக்கும் வகையில் மகராஷ்டிரத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி, அனுமன் மந்திரம் ஓதுபவர்களுக்கு இனிப்புகள் விநியோகிப்பதாக அறிவித்துள்ளார்.

இச்சூழலில், ஒலிபெருக்கிப் பிரச்சினை தற்போது உபியில் மீண்டும் கிளம்பிவிட்டது. இம்மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களான வாராணசி, அலிகர் மற்றும் மதுராவில் பாங்கு முழக்க ஒலிபெருக்கிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

வாராணசியின் ஒரு மசூதியில் பாங்கு முழக்கத்தை எதிர்க்க ஒலிபெருக்கி அமைத்து அனுமன் மந்திரங்கள் ஓதப்பட்டன. அலிகரில் பாங்கு முழக்கங்களுக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், இல்லை எனில், 21 இடங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து அனுமன் மந்திரங்கள் ஓத தங்களை அனுமதிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர் கோரினர். ராமநவமி அன்று கோரப்பட்ட அனுமதிக்கு, அலிகர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. எனினும், அனுமதியை மீறி அலிகரின் சில மசூதிகளின் முன் ஒலிபெருக்கிகளை அமைத்து பாங்கு முழக்கத்தின்போது, அனுமன் மந்திரங்களை ஏபிவிபி அமைப்பினர் ஓதினர்.

சட்டங்கள் சொல்வது என்ன?

ஒலிபெருக்கிகள் விவகாரத்தில் இந்தியாவின் சட்டங்கள் தெளிவாக உள்ளன. ஓசைகளின் மீதான சுற்றுச்சூழல் சட்டம் 2000-ன்படி, இரவு 10.00 முதல் காலை 6.00 மணி வரை மூடிய அறைகளிலும் ஒலிபெருக்கிகளின் ஓசைகளுக்கு அனுமதி அவசியம். இதில் திருமணம், உள்ளூர் பண்டிகைகள் உள்ளிட்ட சில சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக நள்ளிரவு 12.00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. மாநில அரசுகளால் மருத்துவமனை, கல்விக்கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்த இடங்கள் ’அமைதிப் பகுதிகள்’ என அறிவிக்கப்படுகின்றன. இந்த அமைதிப் பகுதிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றுப்புறங்களிலும் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது.

ஒலிபெருக்கிகளில் நிர்ணயக்கப்பட்ட ஓசைகள் அளவு

காலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை 55 டெசிபல் அளவிலான ஓசைகளுக்கு மட்டுமே அனுமதி. இதுவே இரவு 10.00 முதல் காலை 6.00 மணி வரை 45 டெசிபல் அளவிற்கு மட்டும் அனுமதிக்கப்படும். இதுபோன்ற அளவு ஒவ்வொரு பகுதிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் எவருக்காவது ஆட்சேபம் எனில் ஐபிசி சட்டதிட்டங்களின் அடிப்படையில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பின்பற்றாமல் தற்போது நாட்டின் சட்டதிட்டங்களைக் கேலிசெய்யும் வகையில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுப்பது வழக்கமாகிவிட்டது.

கேள்விக்குறியான தேச ஒற்றுமை?

நம் நாட்டில் சாதி, மதம், மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட பலவும் பல்வேறு வகைகளில் உள்ளன. இவற்றை ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மையுடன் ஏற்று மதிப்பளித்து மதநல்லிணக்கச் சூழலைத் தொடர்ந்துவந்தனர். இந்தப் பரஸ்பர அன்பு நாட்டின் மதசார்பற்ற ஜனநாயகக் கொள்கையைப் பறைசாற்றி வந்தது. இதன்மூலம் உதாரணமாக விளங்கிய தேச ஒற்றுமை தற்போது கேள்விக்குறியாக மாறத் தொடங்கிவிட்டது.

இந்துத்துவா அரசியல் காரணமா?

சமீப காலமாகவே அமைதிச் சூழலைக் குலைக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மாறத் தொடங்கியுள்ளன. இந்துத்துவா அரசியல் எனும் பெயரில் உபி-யின் அயோத்தியில் ராமர் கோயில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து முடிவை ஏற்படுத்தியது. இதனால், இந்துத்துவா அரசியல் செய்ய எதுவும் இல்லை என்றாகி நாட்டில் அமைதி சூழல் ஏற்படத் தொடங்கியது.

அதற்குப் பின்னரும், ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்கள் மீதான பிரச்சனைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. ஹிஜாப், பாங்கு ஒலியை அடுத்து என்ன எனும் அச்சமும் உருவாகிவிட்டது. இது நாட்டின் சட்டம் ஒழுங்கின் பாதுகாப்பிற்கு வெளிப்படையான சவாலாக உள்ளது. சுமுகமான சூழல் உருவாக அரசு, அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் சாமானியர்களின் வேண்டுகோள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in