
கேரளாவில் விற்காத லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதால் கடையின் உரிமையாளர் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள போதும் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு லாட்டரி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது. அவ்வப்போது ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுவதாக தகவல்கள் வெளியான போதும், ஏராளமானோர் லாட்டரியை நம்பி ஏமாந்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அரசின் 50/50 லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் ஒரு கோடி ரூபாய் முதல் பரிசாக ஒருவர் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும், அவர் யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பது தெரியவந்துள்ளது. அத்தோலி கிராம பஞ்சாயத்து அருகே லாட்டரி சீட்டு கடை வைத்துள்ள கங்காதரன், வைத்திருந்த விற்பனையாகாத லாட்டரி சீட் ஒன்றுக்கு இந்த பரிசு விழுந்து உள்ளது. அக்டோபர் மாத துவக்கத்திலேயே பரிசு விழுந்ததாக தெரியவந்த போதும், அதனை முழுமையாக நம்ப மறுத்த கங்காதரன், வங்கி நடவடிக்கைகளுக்காக காத்திருந்துள்ளார். நேற்று அவருக்கு அனைத்து வங்கி ஆவணப் பணிகளும் முடிவடைந்து பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து அவர் இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து உள்ளார். 33 ஆண்டுகள் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்த கங்காதரன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டு கடையை துவக்கியுள்ளார். இதுவரை தனது கடையில் ஜாக்பாட் பரிசு எதுவும் விழுந்தது இல்லை எனவும் தற்போது தன்னுடன் சேர்த்து தனது கடையில் லாட்டரி சீட்டுகள் வாங்கிய சிலருக்கு 5,000 ரூபாய் வீதம் பரிசு விழுந்து உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!