
ராமேஸ்வரம் விரைவு ரயிலில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் தவற விட்ட நகை உள்ளிட்ட உடமைகளை போலீஸார் மீட்டு ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவரங்கம் அருகே பழங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சென்னை பெரம்பூர் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், மனைவி முத்துலட்சுமியுடன் சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரமக்குடிக்கு நேற்றிரவு கிளம்பினர். எஸ் 2 பெட்டி இருக்கை 41, 44-ல் பயணித்த இவர்கள் பரமக்குடி ரயில்வே ஸ்டேனில் இன்று காலை இறங்கினர். சில நிமிடங்கள் நின்று புறப்பட்ட ரயிலில் தங்களது உடமைகளை தவறவிட்டனர்.
இது தொடர்பாக பரமக்குடி ஸ்டேஷன் மேலாளரிடம் ராமச்சந்திரன் புகார் தெரிவித்தார். ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அந்த ரயிலில் பணியில் இருந்த உதவி இன்ஸ்பெக்டர் மோகனராஜ், தலைமை காவலர் ஜலாலுதீன் ஆகியோர் அந்த பெட்டிக்கு சென்றனர். அங்கு ராமச்சந்திரன் தவற விட்ட உடமைகளை கைப்பற்றினர்.
அதில் 2 வளையல் உள்பட 11 பவுன் நகை, ரூ.3,500 மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தன. அவற்றை ராமச்சந்திரன் தம்பதியிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.