
ஆன்லைன் விளையாட்டால் கடந்த இருதினங்களுக்கு முன்புதான் நெல்லை மாவட்டம், பணக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்தார். அந்த சோகம் மறைவதற்குள் ஆன்லைன் விளையாட்டில் மூன்றரை லட்சம் ரூபாயை இழந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் தற்கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன்(30) பொறியியல் பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துவந்தார். இவருக்கு செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம் வந்தது. இதனால் வேலைக்கே செல்லாமல் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் உடலை மீட்ட போலீஸார், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது செல்போனை சோதித்துப் பார்த்தபோது அதில் தன் நண்பர் ஒருவருக்கு, என் அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் கேம் விளையாடித் தோற்றுவிட்டேன். அதனால் என் முடிவை நானே எடுத்துக் கொள்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில், ஆவுடையப்பன் தன் மகனிடம் தன் வங்கிக்கணக்கில் போடச்சொல்லி 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதை தன் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு விடிய, விடிய விளையாடி ஒரே இரவில் 50 ஆயிரத்தை பாலன் இழந்துவிட்டார். மேலும், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் விளையாட்டு விளையாடி பாலன் மூன்றரை லட்ச ரூபாயை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்திலேயே அவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.