
உடற்பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர் மீது லாரி மோதியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தேவானந்த்(20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த தேவானந்த், தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்ள தனது டூவீலரில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார் தேவானந்த். திருப்பூர் குமரன் ரோடு எம்.ஜி.ஆர் சிலை அருகே சென்ற தேவானந்த் பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றுள்ளார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த லாரி டூவீலர் மீது மோதியது.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை சிதைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் தேவானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை செல்ல முயன்ற நிலையில் தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் சதீஷை கைது செய்தனர்.