ஆர்யனுடன் செல்ஃபி எடுத்தவர் படும் அவஸ்தை!

அசத்தலாக லுக் விட்டவருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்!
என்சிபி அலுவலகத்தில் ஆர்யன் கானுடன் செல்ஃபி
என்சிபி அலுவலகத்தில் ஆர்யன் கானுடன் செல்ஃபி

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதானார். ஆர்யன் கைதான தினத்தன்று உடனிருந்த ஒரு நபர் ஆர்வக்கோளாறில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த செல்ஃபியே அன்னாருக்கு பின்னர் வினையாக, தற்போது போலீஸாரின் வலைவீச்சுத் தேடலுக்கு ஆளாகியிருக்கிறார்.

தந்தை ஷாருக்குடன் மகன் ஆர்யன்
தந்தை ஷாருக்குடன் மகன் ஆர்யன்

மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பல் ஒன்றில் ரகசியமாய் நடைபெற்ற விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நபர்களில் ஆர்யன் கானும் அடங்குவார். ஷாருக் கானின் பிரபலம் காரணமாக ஆர்யன் கைது விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டது. இது வதந்தியா அல்லது செய்தியா என நம்ப முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். அப்போது போதைத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யனுடன் ஒரு மொட்டைத்தலை நபரின் செல்ஃபி படம் சமூக ஊடகங்களில் வைரலானது. ஆர்யன் போதைப்பொருள் வழக்கில் கைதானதும், விசாரணைக்கு ஆளாகி இருப்பதும் இந்த செல்ஃபியை வைத்துதான் வெளியுலகத்துக்கு ஊர்ஜிதமானது.

தொடர்ந்து ஷாருக் கானை முன்னிறுத்தி ஆதரவு - எதிர்ப்பு என 2 பிரிவாக சமூக ஊடகவாசிகள் கச்சைக்கட்டினர். அந்த சச்சரவில் ஆர்யனுடன் மொட்டையத் தலையர் செல்ஃபி எடுத்த விவகாரமும் வெடித்தது. அந்த நபர் என்சிபி அதிகாரிகளில் ஒருவர் என்று சித்தரித்த ஷாருக் ரசிகர்கள், என்சிபி அமைப்புக்கு எதிராகப் பல விதமான அவதூறுகளைக் கிளப்பினர். என்சிபி அதிகாரிகளை மலினமாக சித்தரித்தும் சமூக ஊடகவெளியில் கரித்துக்கொட்டினர்.

கைதான ஆர்யன் கான்
கைதான ஆர்யன் கான்

இதையடுத்து மேற்படி செல்ஃபி நபரை போலீஸார் தேட ஆரம்பித்தனர். இதில் அவரது பெயர் கிரண் கோஸவி என்றும், தன்னை ஒரு ‘பிரைவேட் டிடெக்டிவ்’ எனச் சொல்லிக்கொள்பவர் என்றும் தெரியவந்தது. ஆர்யன் கைதான சொகுசுக் கப்பலின் சக பயணிகளில் ஒருவரான கோஸவியை, கைது சம்பவத்துக்கான 9 நேரடி சாட்சிகளில் ஒருவராக என்சிபி அதிகாரிகள் சம்பவத்தன்று அழைத்து வந்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் கோஸவி எடுத்த செல்ஃபியால், அன்றைய தினத்தின் வைரல் பேர்வழியானார்.

ஆனால், போலீஸ் தேடுவதை அடுத்து கோஸவி திடீரென தலைமறைவாகவே, அதன் பின்னணியையும் புணே போலீஸார் தோண்டினர். கடைசியில் அவர் மீது மகாராஷ்டிர மாநிலத்தின் 4 காவல் நிலையங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவையனைத்தும் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அப்பாவிகளிடம் லட்சக்கணக்கில் அபேஸ் செய்ததான ஏமாற்றல் வழக்குகள்!

தேடப்படும் கோஸவி
தேடப்படும் கோஸவி

இளைஞர்கள் அதிகம் புழங்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக, வெளிநாட்டு வேலைக்கான வலைகளை விரித்துப் பணம் பறிப்பது கோஸவியின் ஸ்டைல். அவற்றில், சின்மய் தேஷ்முக் என்பவரிடம் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ரூ.3.09 லட்சம் மோசடி செய்த வழக்கை தூசுதட்டிய புணே போலீஸார், கோஸவியைத் தேடிவருகின்றனர். கோஸவி அடிக்கடி மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பறப்பவர் என்பதால், அதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாக ஏமாற்றிப் பிழைத்த நபர், அதே சமூக ஊடக வைரல் செல்ஃபி ஒன்றால் போலீஸால் தேடப்படுவது இன்றைய வைரல் செய்திகளில் ஒன்றாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in