‘நண்பர் முகம் காண...’ - மோடியைச் சந்திப்பது குறித்து போரிஸ் மகிழ்ச்சி!

‘நண்பர் முகம் காண...’ - மோடியைச் சந்திப்பது குறித்து போரிஸ் மகிழ்ச்சி!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து, ‘இன்று டெல்லியில் எனது நண்பர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என அவர் ட்வீட் செய்திருக்கிறார். மேலும், ‘எதேச்சதிகார அரசுகளின் அச்சுறுத்தலை உலகம் எதிர்கொண்டிருக்கும் சூழலில், பருவநிலை மாற்றம் முதல் எரிசக்தி பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றில், இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகளின் கூட்டுறவு மிக முக்கியமானது’ என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

போரிஸ் ஜான்சனின் வருகையையொட்டி, இந்தியாவும் பிரிட்டனும் 1 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான மதிப்புள்ள வர்த்தகத் திட்டங்களிலும் ஏற்றுமதி திட்டங்களிலும் புதிய முதலீடுகளைச் செய்யவிருக்கின்றன. மென்பொருள் தொடங்கி, சுகாதாரம் வரை பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் செய்யும் முதலீடுகள் மூலம் பிரிட்டனில் 11,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நேற்று குஜராத் வந்துசேர்ந்த போரிஸ் ஜான்சனை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்தில் காந்தியின் சாபர்மதி ஆசிரமம், கவுதம் அதானியின் அதானி குழுமத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற போரிஸ் ஜான்சன், நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.

Related Stories

No stories found.