இந்த ட்ரெண்டிங்கை தொடங்கி வைத்தது யார்?- ட்விட்டரில் அனல் பறக்கும் ஒற்றை வார்த்தை!

இந்த ட்ரெண்டிங்கை தொடங்கி வைத்தது யார்?- ட்விட்டரில் அனல் பறக்கும் ஒற்றை வார்த்தை!

ட்விட்டர் தளத்தில் அவ்வபோது திடீரென ஏதாவது ஒன்று ட்ரெண்டிங் ஆக மாறும். எப்படி ட்ரெண்டிங் ஆகியது என்று தெரியாமலே ஏதாவது ஒன்று ட்ரெண்டிங் ஆகிவிடும். அப்படித்தான் நடன சேலஞ்ச், உடற்பயிற்சி சேலஞ்ச், வாட்டர் பக்கெட் சேலஞ்ச் ஆகியவை ட்ரெண்டிங் ஆகின. அந்த வகையில் தற்போது ஒற்றை வார்த்தையை ட்வீட் செய்வது ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

நேற்று காலை முதல் ஒற்றை வார்த்தை ட்வீட்கள் ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்காவின் தனியார் ரயில் சேவை நிறுவனமான ஆம்டிராக் தனது ட்விட்டரில் 'trains' என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்தது. அதனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்தனர். அதனையடுத்து அந்த ட்வீட் சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கை தொடங்கி வைத்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் 'பிரேக்கிங் நியூஸ்', நேஷனல் பப்பிள் ரேடியோ நிறுவனத்தின் 'ரேடியோ', நாசாவின் 'யுனிவர்ஸ்' என்ற ட்வீட்கள் ட்ரெண்டிங் ஆயின. அதாவது தங்களின் செயல்பாடுகளை ஒற்றை வார்த்தையில் விளக்க வேண்டும் என்பதே இந்த ட்வீட்டின் அடிப்படையாக மாறியது.

நிறுவனங்களைத் தொடர்ந்து தனி நபர்களும் இந்த ட்ரெண்டிங்கில் நுழைந்தனர். அமெரிக்க அதிபர் பைடன், 'ஜனநாயகம்' என்பதன் ஆங்கில வார்த்தையை ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த சர்வதேச ட்ரெண்டிங்கில் தமிழகத்தில் அரசியல் தலைவர்களும் நுழைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேற்று காலையிலேயே 'திராவிடம்' என்ற ஒற்றை வார்த்தையை ட்வீட் செய்து இதை தொடங்கி வைத்தார். அதையடுத்து தமிழகத்தின் மற்ற அரசியல்வாதிகளும் பரபரப்பாக தாங்களும் உள்ளே நுழைந்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'தமிழ்' என்ற வார்த்தை பதிவிடப்பட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர் எப்போதும் எங்கும் பயன்படுத்தும் சொல்லான 'தமிழ்த்தேசியம்' என்ற வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். வி.கே.சசிகலா அதிமுகவுக்கு தற்போது தேவைப்படும் முக்கியமான ஒன்றான 'ஒற்றுமை' என்ற வார்த்தையை பதிவிட்டிருக்கிறார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது இலக்கு தமிழ்நாடு என்கிற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை ட்வீட் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தங்கள் கட்சியின் முக்கிய கொள்கையான ''சமூக நீதி' என்ற வார்த்தையை ட்வீட் செய்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் 'அம்மா' என்ற ஒற்றை வார்த்தையை ட்வீட் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழர்களை குறிக்கும் வகையில் 'தமிழன்' என்ற ஒற்றை வார்த்தை ட்வீட் செய்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தன் கட்சியின் பெயரில் முதல் வார்த்தையான 'மக்கள்' என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் 'வீரப்பெண்மை' என்ற வார்த்தையையும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா 'உடன்பிறப்பு' என்ற வார்த்தையையும் பதிவிட்டுள்ளனர். திமுக எம்பிக்கள் ஆ.ராஜா, கனிமொழி ஆகியோர் `பெரியார்' என்ற ஒற்றை வார்த்தையை ட்வீட் செய்துள்ளனர்.

இந்த ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் மேலும் பல பிரபலங்கள் இணைந்து கொண்டுள்ளனர். பொதுமக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒற்றை வார்த்தைகளை ட்வீட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in