பள்ளியிலேயே எல்கேஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:குற்றவாளியைப் பிடித்து நையப்புடைத்த பெற்றோர்

பள்ளியிலேயே எல்கேஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:குற்றவாளியைப் பிடித்து நையப்புடைத்த பெற்றோர்

எல்கேஜி படிக்கும் நான்கு வயது சிறுமிக்கு 2 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநரை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தர்மஅடி கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் டிஏவி பப்ளிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் ரஜினிகுமார். இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவி கடந்த இரண்டு மாதங்களாக சோகமாகவும், அழுது கொண்டும் இருந்துள்ளார். இதை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்காணித்த வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். அவரிடம் பெற்றோர், விசாரித்த போது பள்ளி முதல்வர் அறைக்கு எதிரே உள்ள ஆய்வகத்தில் தன்னை ஓட்டுநர் ரஜினிகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். கடந்த 2 மாதங்களாக தனக்கு அவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து நேற்று பள்ளிக்கு மாணவியை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஓட்டுநர் ரஜினிகுமாரை அடையாளம் காட்டினார். இதையடுத்து அவரைப் பிடித்து சுற்றி வளைத்து மாணவியின் பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். ரஜினிகுமாரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர். எல்கேஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in