சம்பள பணத்தையே எடுக்காமல் லஞ்சத்தில் ராஜபோகம்: விஏஓ உதவியாளர் அறையில் கட்டு, கட்டாக பணம், பரிசுப்பொருட்கள்!

கைப்பற்றப்பட்ட பணம்
கைப்பற்றப்பட்ட பணம் சம்பள பணத்தையே எடுக்காமல் லஞ்சத்தில் ராஜபோகம்: விஏஓ உதவியாளர் அறையில் கட்டு, கட்டாக பணம், பரிசுப்பொருட்கள்!

கேரளத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தங்கியிருந்த அறையில் இருந்து 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள், பல லட்சங்கள் வங்கிகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்ட சம்பவம் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் பாலக்கயம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக இருப்பவர் சுரேஷ்குமார். இவர் மீது தொடர்ச்சியாக லஞ்சப் புகார்கள் சென்றதைத் தொடர்ந்து இவர் ஏற்கெனவே கண்காணிப்பு வளையத்தில் இருந்தார். இந்நிலையில் மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் அவரது நிலத்தை அளக்க சர்வேயருக்கு விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்ப 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து அனுப்பினர். அதை சுரேஷ்குமார் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மறைந்து இருந்து பிடித்தனர். தொடர்ந்து விஏஓ உதவியாளர் சுரேஷ்குமார் தங்கி இருந்த அறையிலும் சல்லடை போட்டுத் தேடினர். அதில் 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இதேபோல் அவர் பல வங்கிகளிலும் 40 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்த தகவல்களும் கிடைத்தன. இதேபோல் அவரது சம்பள பணத்தை நீண்ட ஆண்டுகளாகவே சுரேஷ்குமார் எடுக்கவே இல்லை. அதில் மட்டும் 20 லட்சம் ரூபாய் சேர்ந்து கிடந்தது. இதேபோல் தேன் பாக்கெட்கள் தொடங்கி, பேனா பாக்கெட்கள் வரை லஞ்சமாக பெற்றுக் குவித்து வைத்திருந்தார்.

பாலக்கயம் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த சுரேஷ்குமார் திருச்சூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூன் 6-ம் தேதிவரை அவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பாலக்காடு ஆட்சியரும் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in