ஒரே பாலின உறவு குறித்து மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவை: கோர்ட் உத்தரவின் பேரில் சேர்ந்துவாழும் ஓரினச் சேர்க்கை இளம்பெண்கள் பேட்டி

ஒரே பாலின உறவு குறித்து மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவை: கோர்ட் உத்தரவின் பேரில்  சேர்ந்துவாழும்  ஓரினச் சேர்க்கை இளம்பெண்கள் பேட்டி

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின், இவரது தோழி பாத்திமா நூரா. இவர்கள் இருவரது பெற்றோரும் வளைகுடா நாட்டில் சேர்ந்து வேலைசெய்தனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பானது. 11-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே தொடங்கிய இவர்களது நட்பு, ஒருகட்டத்தில் காதலாக மாறியது. அதன் தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் ஓரினச் சேர்க்கை பழக்கமும் ஏற்பட்டது.

இதனால் இருவரது பெற்றோரும் கூடிபேசி, வளைகுடா நாட்டில் இருந்து, அவர்களைப் பிரிக்கும் நோக்கத்தில் பாத்திமா நூராவை மட்டும் கேரளத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவரைத் தேடி, வளைகுடா நாட்டில் இருந்து கேரளத்திற்கே வந்துவிட்டார் ஆதிலா நஸ்ரின். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து கடந்த மே 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். உறவினர்கள் தேடிப்போய் பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். மேலும் பாத்திமாவை அவரது குடும்பத்தினர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கொடூரமாகத் தாக்கினர். ஆதிலா நஸ்ரின், தங்கள் மகள் பாத்திமா நூராவைக் கடத்தி வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கேரள உயர்நீதி மன்றம்
கேரள உயர்நீதி மன்றம்

ஆட்கொணர்வு மனு
இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிலா நஸ்ரின், நடந்த சம்பவங்களை கேரள உயர்நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்து பாத்திமா நூராவை காணவில்லை. தங்களுக்குள் ஓரினச் சேர்க்கை இருப்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் 31-ம் தேதி அனுமதி வழங்கியது. கடந்த மூன்று மாதங்களாக ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சென்னையில் வீடு எடுத்து சேர்ந்து வசித்துவருகின்றனர்.

வாழ்க்கை இப்போது எப்படிச் செல்கிறது என ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் கூறுகையில், ‘எங்கள் உணர்வைப் புரியாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர். இந்த உணர்வு, சாமானிய மக்களுக்குப் புரிவதில்லை. நானும், என் தோழியும் எங்கள் கருத்தில் உறுதியாக இருந்து, நீதிமன்ற உத்தரவுப்பெற்று சேர்ந்துள்ளோம்.இப்போது யாருடைய தலையீடும் இல்லாமல், பறவையைப் போல் சுதந்திரமாக வாழ்கிறோம்.

மாற்றம் தேவை

நமக்காக வாழாதவரை வாழ்க்கை முழுமையடையாது. நாங்கள் சென்னையில் வாடகைக்கு பிளாட் தேடியபோதும்கூட எங்கள் அடையாளத்தை மறைக்கவில்லை. பெரும்பாலான பெற்றோருக்கு இதுகுறித்துப் புரிதல் இருப்பதில்லை. நாங்கள் இருவருமே வேலைசெய்வதால் எங்களிடம் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தது. அதனால் உயர்நீதிமன்றப் படியேறி சட்ட உரிமையை நிலைநாட்டி சேர்ந்து வாழ்கிறோம்.

பொதுவாக சாதாரண குடும்பங்களில் பெண்கள் சமையலறைப் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். இங்கே இருவரும் சரிசமமாக சமையலறைப் பணிகளைப் பகிர்ந்துகொள்வோம். அனைத்து விஷயங்களிலும் ஓரினச்சேர்க்கை தம்பதியில் சமம்தான். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகி விட்டாலும், 2018-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றது என அறிவித்தது. இருந்தும், ஒரே பாலின உறவு குறித்த புரிதலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவையிருக்கிறது. அதேநேரம், இந்தத் தலைமுறையினர் மனதில் இதுகுறித்து புரிதல் மலர்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். நாங்கள் சுதந்திரமாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றோம் ”என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in