வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு: அதிரடி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

செப்டம்பர் 27 ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள் விசாரிக்கும் வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 முதல் அனைத்து அரசியல் சாசன அமர்வு விசாரணைகளையும் அதன் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் என அறிவித்துள்ளது. இதன் மூலமாக குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370-ன் கீழ் ரத்து செய்யப்பட்ட வழக்கு மற்றும் பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கான ஒதுக்கீடு போன்ற வழக்குகளின் நடவடிக்கைகள் இனி நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அரசியலமைப்பின் 21வது பிரிவின்படி குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் கீழ், வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் 2018 ல் தீர்ப்பளித்தது. ஆனால் அது இதுவரை செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்ற பிறகு வழக்குகள் நேரடி ஒளிபரப்பு எனும் முக்கிய முடிவினை எடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தான் ஓய்வுபெறும் கடைசி நாளில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தார். மேலும், சில வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்ததால், நீதிபதி ரமணா தலைமை நீதிபதியாக இருந்த கடந்த வாரத்தில் பல அரசியல் சாசன அமர்வுகளையும் அமைத்தார்.

கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, ​​நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்பட்டன. பொதுமுடக்கத்தின் காரணமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நேரலை அறிவிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தலைமை நீதிபதி யு.யு.லலித் சமீபத்தில் ஒரு முழு நீதிமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது நீதிபதிகள் முதலில் அரசியல் சாசன வழக்கு விசாரணைகளை லைவ் ஸ்ட்ரீமிங் எனும் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும், பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒளிபரப்பு செய்யவேண்டும் எனவும் முடிவு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in