இந்தியாவில் முதன் முறையாக சலூன் கடையில் ஒரு இலக்கியத் திருவிழா!

முடி வெட்டும் பொன் மாரியப்பன்
முடி வெட்டும் பொன் மாரியப்பன்

சலூன் கடைகளில் அரசியல் பேச்சுத்தான் வழக்கமாக பொறி பறக்கும். ஆனால் தூத்துக்குடியில் உள்ள பொன்மாரியப்பனின் சலூனில் நூலகம், வாசிப்பு என இலக்கிய நெடி பறக்கும்.

இப்போது அதன் அடுத்த பாய்ச்சலாக தன் சலூன் கடையில் இலக்கிய விழாவையும் நடத்துகிறார் பொன் மாரியப்பன். வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த சலூன் கடையில் நடக்கும் இலக்கிய கூட்டத்தில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள தன் சலூன் கடையில் நூலகத்திற்கு இடம் ஒதுக்கி அனைவரது பாராட்டையும் பெற்றவர் பொன்மாரியப்பன். பிரதமர் நரேந்திரமோடியும் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனின் இந்த பணிகளைச் சுட்டிக்காட்டிப் பெருமையாக பேசியிருந்தார். இவரது சலூனில் 500-க்கும் அதிகமான தரமான இலக்கியப் புத்தகங்கள் அணிவகுக்கின்றன.

இந்நிலையில் பொன்மாரியப்பன் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்வகையில் சலூன் நூலகம் சார்பில் இலக்கிய வாசகர் திருவிழாவை முன்னெடுக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிர வாசகரான பொன்மாரியப்பன், இந்நிகழ்வுக்கு அவரையே சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அவரது சலூன் கடையிலேயே இந்த இலக்கிய நிகழ்வு நடக்கிறது. சலூன் நூலகர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் பொன்மாரியப்பனின் இந்த செயல் இலக்கிய உலகின் கவனம் பெற்றுவருகிறது. இந்திய அளவிலேயே சலூன் கடையில் இலக்கியத் திருவிழா நடப்பது இதுவே முதல்முறை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in