தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பிலிருக்கும் 102 பேரின் பட்டியல் தயார்: தமிழக போலீஸ் அடுத்த மூவ்

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பிலிருக்கும் 102 பேரின் பட்டியல் தயார்: தமிழக போலீஸ் அடுத்த மூவ்

கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கும் 102 பேர் பட்டியல் தயார் செய்து விசாரணை நடத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.

கோவை உக்கடத்தில் சங்கமேஷ்வரர் கோயில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி கார் குண்டுவெடிப்பில் ஜமேஷா முபின் பலியானதை அடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்திய வெடிபொருட்கள், சிலிண்டர் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் செய்யக்கூடிய பொருட்களை வாங்கி, தற்கொலைபடை தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து உளவுத்துறை கோட்டை விட்டததால் தான் இச்சம்பவம் நடந்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் மாநிலத்திற்கென்று பிரத்யேகமாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 90 நபர்களிடம் ரகசிய சோதனை மற்றும் விசாரணையை தமிழக போலீஸார் நடத்தி முடித்துள்ளனர். அதன்படி நேற்று சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டு மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். தமிழக காவல் துறைக்கென்று தனியாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். காவல்துறை கூடுதல் இயக்குநர் அல்லது ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் இந்த பிரிவு விரைவில் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in