
தன் காதலைக் கைவிட்ட சிறுமியை எரித்துக் கொலை செய்த வாலிபருக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், கீழமுட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எவரெஸ்ட்(23). இவரும் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உனக்கு இப்போது காதலிக்கும் வயது இல்லை எனவும் அறிவுரைக் கூறினர். இதனால் சிறுமி, அந்த வாலிபருடனான காதலை முறித்துக்கொண்டார். இதனால் கடந்த 2013-ம் ஆண்டு, சிறுமியின் வீட்டுக்குச் சென்ற எவரெஸ்ட் வீட்டில் சிறுமி தனியாக இருக்கும்போது அவர் மேல் டீசலை ஊற்றி தீவைத்தார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அந்த சிறுமி உயிர் இழந்தார்.
இதில் வெள்ளிச்சந்தை போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமீனில் வெளியில் வந்தார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சிறுமியை எரித்துக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை, மரணம் விளைவிக்கும் நோக்கத்தில் சிறுமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 வருடங்கள், 5 ஆயிரம் அபராதம் விதித்தார். ஏக காலத்தில் இதை அனுபவிக்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.