பதவி விட்டுமல்ல தமிழகத்தை விட்டும் ஆளுநர் வெளியேற வேண்டும்: போராட்டத்தை அறிவித்தது எஸ்டிபிஐ

நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவதோடு, தமிழகத்தை விட்டும் வெளியேற வேண்டும் என போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா இருக்கன்துறையில் ஏற்கெனவே இருகுவாரிகள் உள்ளன. இந்நிலையில் மூன்று புதிய குவாரி அமைக்க தனியார் கம்பெனி ஒன்று அனுமதி கேட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு எனவும், எஞ்சியவற்றை நுகர்வோர் தேவைக்கு வழங்குவதாகவும் இந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைத்தாக்கல் செய்துள்ளது. இவ்விடம் அணு உலையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கிறது. சுமார் 190 அடி ஆழத்தில் அமைய உள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் பேராபத்தாக முடிந்துவிடும். இதற்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

அரசின் கொள்கையைப் பேசுவதுதான் ஆளுநரின் உரை. அதில் ஆளுநர் தன் சொந்த விருப்பு, வெறுப்புகளைக் காட்டக்கூடாது என்பதுதான் மரபு. ஆனால் ஆளுநர் அச்சிட்ட சில பகுதிகளைப் படிக்காமலும், தானே சிலவற்றை சேர்த்தும் மரபு மீறியுள்ளார். கூட்டாட்சிக்கு விரோதமாக அவரது போக்கு இருக்கிறது. ஆளுநர் பதவியில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் வெளியேற வேண்டும் என எஸ்டிபிஐ போராட்டத்தை முன்னெடுக்கும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in