
காப்புக் காடுகளுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதி இல்லை என்ற தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
அனைத்து முக்கிய தலைவர்களின் கையெழுத்தோடு அனுப்பப்பட்டு இருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள்., தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கடந்த டிசம்பர் 14 ம் தேதியன்று அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மூலம் தமிழ்நாடு சிறு கனிம சலுகை சட்ட விதிகள் 1959 பிரிவு 36 உட்பிரிவு 1A வில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த சட்ட திருத்தத்தின்படி காப்புக் காடுகளின் எல்லைகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. காடுகள் மற்றும் காட்டுயிர்கள் பாதுகாப்பிற்கு இந்த தடை மிகவும் பேருதவியாக இருந்தது. இந்த நிலையில் அந்த தடை நீக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் 20.33 சதவீதம் மட்டுமே காட்டுப்பகுதியாக உள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கே தேசிய பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் யானைகளின் வலசைப் பாதை ஆகியவை உள்ளன. இந்த நிலையில் அந்த தடையாணை நீக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள வனப்பகுதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20.33 சதவீதம் மட்டுமே காட்டுப்பகுதியாக உள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கே தேசிய பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் யானைகளின் வலசைப் பாதை ஆகியவை உள்ளன. இந்த நிலையில் அந்த தடையாணை நீக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள வனப்பகுதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பசுமைத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர், இந்த தடையை நீக்கியிருப்பதன் மூலம் வனப்பகுதிகளுக்குள் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். நமது நிலப் பாகுபாடுகளை காட்டுயிர்கள் அறியாது. அவற்றின் பாதையில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் விலங்குகளின் இயல்பான வலசை பாதிக்கப்பட்டு அவை விளை நிலங்களில் புகுந்துவிடும். குறிப்பாக மனிதகுடியிருப்புகளில் புகும் அபாயமும் ஏற்படும். அதனால் காட்டுயிர்கள் - மனித மோதல் அடிக்கடி நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து செயல்பட்டு காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் பாதிப்பையும், ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை கடிதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தின் தலைவர்களும், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சமூக செயல்பாட்டு அமைப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.