
சீர்காழி குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்யக்கோரி சீர்காழியில் வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக ரங்கேஸ்வரி பணியாற்றி வருகிறார். அவர் நீதிமன்ற பணிகளில் நீதிமன்ற மான்பை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டும் வழக்கறிஞர்கள், நீதிபதி ரங்கேஸ்வரியை சீர்காழி நீதிமன்றத்திலிருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 75 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதியை மாற்றும் வரை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும், நீதிபதியை மாற்றிய பின்னரே நீதிமன்றம் சென்று பணியில் ஈடுபடப் போவதாகவும் வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதி ரங்கேஸ்வரியை மாற்றக் கோரி நாகை மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்துள்ளனர். வழக்கறிஞர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் வழக்குகளை நடத்த முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.