
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கறிஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த இனுங்கூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55). இவர் திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகிறார். இவர் நேற்று இனுங்கூரில் வீட்டில் இருந்தபோது அதே பகுதியில் அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் 3 வயது சிறுமி அவரது வீட்டுக்குள் விளையாட வந்துள்ளார். அப்போது தனிமையில் இருந்த பழனியப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையைக் கண்டு அவரை பரிசோதித்த தாய் சிறுமியிடம் விவரங்களை கேட்டு அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். இதுகுறித்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் பழனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.