அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை, 30 சதவீதமாக உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில பாரதிய சத்திரிய மகாசபா சார்பில் அதன் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும் முன், 0.15 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 2,656 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 500 மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற முடியாத நிலையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் மாணவர் சேர்க்கையை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in