`இதற்காகத்தான் திருடனாக மாறினேன்'- போலீஸை பதறவைத்த சட்டக்கல்லூரி மாணவனின் வாக்குமூலம்

`இதற்காகத்தான் திருடனாக மாறினேன்'- போலீஸை பதறவைத்த சட்டக்கல்லூரி மாணவனின் வாக்குமூலம்

குமரி, கேரளாவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை குமரி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில் அவர் சட்டக்கல்லூரி மாணவர் என்பது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குமரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் விதத்தில் மாவட்ட எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் மணவாளக்குறிச்சிப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரைக் கைது செய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் குமரி மாவட்டம் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோஸ்(30) என்பது தெரியவந்தது. அவர் குமரி, கேரளத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் அவரிடம் இருந்து இருபத்தைந்தே முக்கால் பவுன் நகையை மீட்டனர். மேலும் டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 4 மாதத்தில் மட்டும் 14 இடங்களில் திருடியிருக்கும் எட்வின் ஜோஸ் போலீஸாரிடம் கூறுகையில், “நான் கேரளத்தில் ஒரு தனியார் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு பீஸ் கட்ட முடியாததால் கட்டிட வேலைக்குச் சென்றேன். ஆனாலும் எனக்கு அதிகப்பணம் தேவைப்பட்டதால் ஒவ்வொரு பகுதியாகக் கொள்ளையடிக்கச் சென்றேன். ஒரே பகுதியில் திருடினால் பிடித்து விடுவார்கள் என்பதால் குமரி, கேரளத்தின் பல்வேறுப் பகுதிகளில் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். திருடிய நகைகளை விற்க மாட்டேன். விற்றால் திடீரென எப்படி இவ்வளவு நகை, எங்கிருந்து கிடைத்தது எனவும் சந்தேகம் வரும். அதேநேரத்தில் இந்த நகைகளை அடகு வைத்துவிடுவேன். அடகு வைத்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்வேன். சுற்றுலா செல்வேன்!” எனச் சொன்னார். போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in