அம்பலமாகும் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’கள்!

உள்ளாடை அகற்றலை தொடரும் ‘நீட்’ சர்ச்சை
அம்பலமாகும் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’கள்!

தேர்வர்களின் உள்ளாடையை அகற்றியது தொடர்பாக, நடந்து முடிந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு கெடுபிடிகள் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கண்டனங்கள், காவல்துறையின் கைதுகள் என இந்த சர்ச்சை ஓயும் முன்னரே, நீட் தேர்வில் அரங்கேறிய மிகப்பெரும் ஆள்மாறாட்ட முறைகேட்டினை சிபிஐ ஆராய்ந்து வருகிறது. நாடு முழுக்க வலைப்பின்னலாக இந்த முறைகேடு அரங்கேறி இருப்பதாக வெளியாகும் தகவல்கள் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது.

அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வாக ‘நீட்’ நடைபெறுகிறது. நாடெங்கும் ஒரே நுழைவுத்தேர்வு, தகுதியுடைய மாணவர்களை கண்டறிதல், தரமான மருத்துவர்களை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன், அறிமுகமானது முதலே நீட் சர்ச்சைகளை சம்பாதித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் போராடி வருகின்றன. தமிழகத்தில் வருடந்தோறும் நீட் மாணவர்களின் உயிர்களை பறிபோவதும் தொடர்கதையாகி வருகிறது. மாணவி அனிதா தற்கொலையில் தொடங்கிய அரியலூர் மாவட்டத்தில், சில தினங்களுக்கு முன்னர்கூட நிஷாந்தி என்ற மாணவி நீட் அச்சம் காரணமாக உயிரை மாய்த்து கொண்டார்.

இந்த அவலங்களுக்கு அப்பால் நீட் தேர்வு மையத்தை முன்னிறுத்தி, கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளின் பெயரிலான அத்துமீறல்களும் அரங்கேறி வருகின்றன. நகைகள், தொப்பி, பெல்ட் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் காலணி, எழுதுபொருட்கள் உள்ளிட்டவைக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலாயின.

இவற்றின் உச்சமாக ஜூலை 17 அன்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் தேர்வில், மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் தேர்வில் கவனம் குவிக்க வழியின்றி தடுமாறியதாக மாணவிகளின் கண்ணீர் பேட்டிகள் வெளியாகி வருகின்றன.

ஆளும் சிபிஎம் கட்சியினருடன் அதன் எதிர் முகாமான பாஜகவினரும் இணைந்து நீட் சர்ச்சைக்கு ஆளான கல்லூரியை துவம்சம் செய்துள்ளனர். மாணவி ஒருவரின் தந்தை அளித்த புகாரையடுத்து, 5 நபர்களை கைது செய்து கேரள மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர். மத்தியிலிருந்து உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த களேபரங்களுக்கு மத்தியில், நீட் நுழைத்தேர்வில் ஆள் மாறாட்டம் வாயிலான பெரும் வலைப்பின்னல் மோசடியை சிபிஐ மோப்பமிட்டுள்ளது. டெல்லியை மையமாக் கொண்டு கைதுகள் தொடங்கியிருப்பினும், இந்த வலைப்பின்னல் நாடு நெடுக பரவியிருப்பதாக சிபிஐ சந்தேகிக்கிறது. ’முன்னாபாய் எம்பிபிஎஸ்’(தமிழில் ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’) பாணியில் அசல் தேர்வர்களுக்கு பதிலாக மோசடி நபர்கள் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது அம்பலமாகி உள்ளது. நீட் ஹால்டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படத்தை ’மார்பிங்’ மாற்றம் செய்வதன் மூலமே சுலபமாக இந்த மோசடி வித்தையை அரங்கேற்றி உள்ளனர்.

இதற்காக நீட் தேர்வர்கள் தரப்பிலிருந்து தலைக்கு ரூ20 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஆள்மாறாட்ட தேர்வருக்கு ரூ5 லட்சமும், இடைத்தரகர்களுக்கு இதர லட்சங்களுமாக பேசி முடிவு செய்துள்ளனர். இதன்படி தேர்வரின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்ட அசல் தகவல்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுட்டன் தேர்வறையில் மோசடியாளர்கள் பிரவேசிக்கின்றனர். இந்த நபர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சில நீட் தேர்வு பயிற்சி மையங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு உருப்படியான பாடப் பயிற்சி தருவதற்கு பதிலாக, பசையான பெற்றோர்களைக் கண்டறிந்து லகரங்களை பேரம் பேசி கறந்துள்ளன. டெல்லி மோசடியில் குற்றச்சாட்டுக்கு ஆளான 11 நபர்களில் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லிக்கு அப்பால் உத்தரப்பிரதேசம், பிஹார், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த நீட் மோசடி வலைப்பின்னல் பரவியிருப்பதாக முதல் சுற்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளன. வட மாநிலங்களை மையமாகக் கொண்டு இந்த நீட் மோசடி அம்பலமானபோதும், குறிப்பிட்ட பயிற்சி மையங்களுக்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பதால் மோசடிகளின் எண்ணிக்கை பூதாகரமாக வெளிப்பட உள்ளது. கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆள் மாறாட்டக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமே. பின்னணியில் இயங்கிய மூளைக்காரர்கள் பிடிபடும்போது நீட் மோசடியின் கோர முகம் முழுமையாக வெளிப்படும்.

ஆள் மாறாட்ட அடிப்படையிலான நீட் மோசடி வரிசையில் இந்த கைதுகள் ஒன்றும் புதிதல்ல. சென்ற வருடம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை மையமாகக் கொண்ட ஆர்.கே.எஜுகேசன் கேரியர் கைடன்ஸ் என்ற பயிற்சி நிறுவனம் சார்பில், தலா ரூ50 லட்சம் பெற்றுக்கொண்டு ஆள்மாறாட்ட மோசடியை நடத்தியதை சிபிஐ கண்டுபிடித்தது. இவற்றுக்கு முன்னோடியாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை மையமாகக் கொண்ட மெகா நீட் மோசடியை சிபிசிஐடி விசாரித்தது.

உதித் சூர்யா என்ற தேர்வர் தரப்பிலிருந்து வெளியான் சிறு புகாரின் பின்னணியில் இந்த தமிழக மோசடி வெளிப்பட்டது. ஆள் மாறாட்டம் மூலமாக நீட் தேர்வு ’எழுதிய’ மாணவர் உதித் சூர்யா தரப்பை, பலகோடி கேட்டு பிளாக்மெயில் செய்த மர்ம நபர்களால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. கூடவே நாடெங்கிலும் நீட் மோசடி மூலம் மருத்துவ சேர்க்கை பெறுவோர், தமிழகத்தின் மருத்துவ சீட்டுகளை விரும்பி பெற்று இங்கு பதுங்கும் விநோதமும் வெளிப்பட்டது.

உதித் சூர்யா(வலது) மற்றும் அவரது ஆள்மாறாட்ட தேர்வர்
உதித் சூர்யா(வலது) மற்றும் அவரது ஆள்மாறாட்ட தேர்வர்

மார்பிங் புகைப்படம் வாயிலான நுழைவுத் தேர்வு ஆள் மாறாட்டத்துடன் மருத்துவ சேர்க்கை மோசடிகள் முடிவு காண்பதில்லை. அதனைத் தொடரும் கலந்தாய்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் கல்லூரியில் சேர்க்கை நடைமுறைகள் ஆகியவற்றிலும் சங்கிலித் தொடராக இடைத்தரகர்களின் கரன்சி இடையீடு இருந்தால் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை பலிதமாகும். எனவே நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு அப்பாலும் பல்வேறு கண்ணிகளில் மோசடிகள் தொடர்வதும் உறுதியாகிறது. இந்த அடிப்படையில் பல அடுக்குகளில் மோசடியாளர்களின் வலைப்பின்னல் பரவி இருக்கின்றன.

நுழைவுத் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தொடங்கி மருத்துவ கலந்தாய்வு மற்றும் கல்லூரி சேர்க்கை வரை கோடிகளில் மோசடி பேரத்தின் ‘பேக்கேஜ்’ தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் மற்றும் அதிகார ஆசிகள் இன்றி இவை அரங்கேறுவது அத்தனை சுலபமல்ல. அதற்கேற்ப ஆண்டுதோறும் தலைகாட்டும் நீட் மோசடிகள் ஆரம்ப விசாரணையோடு கிணற்றில் விழுந்த கல்லாகின்றன. நிராசையாகும் மருத்துவ கனவுகளால் அப்பாவி மாணவர்கள் உயிரைப் பறிகொடுப்பது மட்டும் தொடர்கதையாகிறது. ’நீட் நுழைவுத் தேர்வு முறையே மோசடியானது’ என்று அதற்கு எதிராக தொடரும் போராட்டங்களைவிட, நீட் மோசடிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு நெட்டித்தள்ளும் தற்போதைய நெருக்கடியை என்ன சொல்வது?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in