
விருதுநகர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டும் இதே நவம்பர் 29 ஆம் தேதி கனமழையின் காரணமாக விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அப்போது ஆட்சியர் அதுகுறித்துப் போட்ட பதிவு வைரலும் ஆனது. அந்த நினைவை எடுத்து பகிர்ந்து வருகின்றனர் விருதுநகர் மாவட்ட நெட்டிசன்கள்!
ஆட்சியரின் அசத்தல் பதிவு!
கடந்த ஆண்டு இதேநாளில் விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி, ‘விருதுநகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை!”என தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதற்குக் கீழே பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் நன்றி சார் என உருகிக்கொண்டு இருக்க ஆட்சியர் பதில் ட்விட் ஒன்று போட்டார். அதில், “தம்பிகளா நன்றியெல்லாம் போதும். சோசியல் மீடியா, பேஸ்புக்கை மூடுங்க. சோசியல் சயின்ஸ் டெஸ்ட் புக்கை திறங்க. உட்கார்ந்து படிங்க. நாளை தேர்வு இருக்கிறது” என தங்கிலீஸில் தட்டிவிட்டார். அது வைரலும் ஆனது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதலே பெய்துவரும் கனமழையினால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை விடுமுறைக்கு நடுவே போன வருடமும் இதே நாள் லீவு. இந்த வருடமும் இதே நாள் லீவு. இரண்டுக்கும் ஒரே காரணம் தான்! என வினோத ஆராய்ச்சி செய்து, ஆட்சியரின் கடந்த ஆண்டு ட்விட்டையும் ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்! தொடர் மழை காரணமாக தேனிமாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.