ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் நகரும் நகரம்: பிரமிப்பூட்டும் பிரம்மாண்டம்

ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் நகரும் நகரம்: பிரமிப்பூட்டும் பிரம்மாண்டம்

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான விமானம் தாங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை, பிரதமர் மோடி இன்று காலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்திலிருந்து இந்தக் கப்பலை மோடி தொடங்கிவைத்தார். ரஷ்யாவின் உதவியுடன் உருவான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கிப் போர்க் கப்பலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டாவது கப்பல் இது. இந்தியக் கடற்படை இந்தக் கப்பல் மேலும் வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம்

1961-ல் பிரிட்டனிலிருந்து வாங்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க் கப்பலின் பெயர் ஐஎன்எஸ் விக்ராந்த். அந்தக் கப்பல், 1971-ல் நடந்த பாகிஸ்தானுடனான போரின்போது இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. அந்தப் போரின் முடிவில்தான் வங்கதேசம் எனும் நாடு உருவானது. 1997-ல் அந்தக் கப்பலின் செயல்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அந்தக் கப்பலின் பெயரே, இந்தியாவில் தயாரான இந்தக் கப்பலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு கப்பல் உருவாக்கப்பட்டதில்லை எனும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் இந்தக் கப்பலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

மலைக்கவைக்கும் நீளம்

இரண்டு கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவு கொண்ட பரந்த கப்பல் இது. 44,000 டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 262 மீட்டர். அகலம் 62 மீட்டர். 18 தளங்களின் உயரம் கொண்ட இந்தக் கப்பலைப் பார்ப்பவர்கள் நகரும் நகரம் என்றே சொல்வார்கள். அத்தனை பிரம்மாண்டம்!

ஐஏசி-1 என அழைக்கப்படும் இந்தக் கப்பலை வடிவமைத்த மேஜர் மனோஜ் குமார், இதை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு உருக்கைக் கொண்டு மூன்று ஈஃபிள் கோபுரங்களை உருவாக்கலாம் என்றும், இதில் பயன்படும் மின்சாரத்தைக் கொண்டு கொச்சி நகரின் பாதி பகுதிகளில் மின் விளக்குகளை எரியச் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இக்கப்பலின் மேல் தளத்தில் விமானம் நிறுத்தும் ‘ஹங்கார்’ பகுதி மட்டும் இரண்டு ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு இணையானது. மிக் ரக ஜெட் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இந்தக் கப்பல் தாங்கிச் செல்லும். மொத்தம் 30 விமானங்களை இதில் நிறுத்தலாம்.

1,600 பேர் இக்கப்பலில் பயணம் செய்யலாம். அவர்களுக்காகப் பிரத்யேகமாக சமையலறை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகளை உருவாக்கும் இயந்திரமும் அதில் உண்டு.

16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 250 எரிபொருள் டேங்கர்கள் என அசரவைக்கும் இந்தக் கப்பலை உருவாக்க 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமும் 23,000 கோடி ரூபாயும் தேவைப்பட்டது.

உள்நாட்டிலேயே இப்படியான போர்க் கப்பல்களை உருவாக்கும் திறன் இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இருந்தது. இப்போது இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in