கர்நாடக பாஜக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி காட்டம்!

அளக்குடியில் அன்புமணி
அளக்குடியில் அன்புமணி

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், திருக்கழிப்பாலை - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், அளக்குடி ஆகிய கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரி அந்த இடத்தில் அமையவுள்ள தடுப்பணை குறித்த திட்ட வரைப்படத்தினை அன்புமணியிடம் காட்டி விளக்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறுகையில், "கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை - அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்குத் தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வழியாக கடல் நீர் 22 கிமீ உட்புகுந்துள்ளது. கோடை காலத்தில் இந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த தடுப்பணை வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது இங்கு தடுப்பணைக் கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் 200 கிராமங்கள் பயன் அடையலாம். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும். தடுப்பணைக் கட்ட தாமதித்தால் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும், "காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளும் வகையில் அரசு திட்டங்கள் தயார் செய்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு பிறகு அதிக அணைகள் இல்லை. அதனால் அதிக நீரை தேக்கி வைக்கும் நோக்கில் அதிக தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக திட்ட அறிக்கையை விவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது" என்றார் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in