ஜார்க்கண்டில் தொடங்கிய மொழிப் போராட்டம்: முதல்வர் உருவபொம்மை எரிப்பு

ஜார்க்கண்டில் தொடங்கிய மொழிப் போராட்டம்: முதல்வர் உருவபொம்மை எரிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொழிப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. தன்பாத், பொகாரோ ஆகிய பகுதிகளில் மாநில மொழிகளின் பட்டியலில் இருந்து போஜ்புரி, மகஹி, மைதிலி ஆகிய மொழிகளை நீக்குவது என்ற முடிவை ஜார்க்கண்ட் மாநில அரசு எடுத்து சனிக்கிழமை (பிப்.19) அறிவித்தது. இதையடுத்து, இம்மூன்று மொழிகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த முடிவைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். தங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இம்மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு ஏராளமானவர்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பட்டியலிலிருந்து நீக்கினர் என்பதிலிருந்தே இது ஏற்கெனவே கற்பிக்கப்பட்டும் நடைமுறையிலும் இருந்திருக்கிறது என்பது புரிகிறது. ஆயிரம் பேருக்கும் குறைவான சமூகங்களால் பேசப்படும் மொழிகளைக் கூட காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மொழிகள் பாதுகாப்பு அமைப்பு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் நிலையில், இப்படி சில மொழிகளைப் பட்டியலிலிருந்தே எடுப்பதற்குக் காரணம் அரசியல் தவிர வேறில்லை. மைதிலி, போஜ்புரி என்பவற்றை இந்தி மொழிக் குடும்பத்தில் சேர்க்கிறார்கள், ஆனால் அந்த மொழிக்காரர்களோ தங்களுடைய மொழிக்கு தனி கலாச்சாரம் – வரலாறு உள்ளது என்றே கூறுகிறார்கள். இந்தி திரைப்படங்களைப் போல போஜ்புரி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றன. போஜ்புரி பேசுகிறவர்கள் பரவலாக உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களிலும் நேபாளத்திலும் வாழ்கின்றனர். மைதிலியும் பிஹாரின் மிதிலா பகுதியில் பேசப்படும் மொழி. மிகவும் பழமையானது.

தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்று புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களும் தேசியவாதிகளும் அவரவர் தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றுக்கொண்டு பிறகு ஆங்கிலம் உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்துகின்றனர். மாநிலங்களில் சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான் பேசுகிறார்கள் என்றாலும் அந்த மொழியில் கற்றுத்தர ஆசிரியர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு அதிகம் செலவாகிவிடப்போவதில்லை.

சம்ஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றுத்தர ஒதுக்கப்படும் நிதியில் சிறிதளவை இவை போன்ற மாநில மொழிகளுக்கும் பழங்குடியினர் மொழிகளுக்கும் மத்திய அரசு ஒதுக்குவது அவசியம். புதிதாக ஒரு மொழியை உருவாக்க வேண்டாம், இருக்கும் மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு, தாய் மொழியைப் போற்றும் எவருக்கும் இருக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகத்தவர் அவர்களுடைய மொழியில் பேசுவதும் படிப்பதும் மாநிலத்தின் பெரும்பான்மை மொழி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தாகிவிடாது. மொழி உணர்வு அவசியம் அது பிற மொழிகளுக்கு எதிராகவும் பிற மொழி பேசுவோருக்கு எதிராகவும் மாறிவிடக் கூடாது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

மீண்டும் இந்த மொழிகள் மாநிலப் பட்டியலில் இடம்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதே சமயம் ஜார்க்கடி மொழி பாதுகாப்புக் குழு, தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய/ மாநில அரசைப் பாராட்டியும் வெற்றியைக் கொண்டாடியும் ஊர்வலம் சென்றது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகப் போராடிய தியாகிகளின் சிலைகளுக்கு அவர்கள் ஊர்வலத்தின்போது மாலையிட்டனர்.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி ஆள்கிறது. காங்கிரஸின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மொழிகள் நீக்கப்பட்டிருக்காது என்பதால் மாநில காங்கிரஸ் தலைவரின் உருவ பொம்மையை எரித்ததாக போஜ்புரி, மைதிலி, மகஹி மொழி பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in