
உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் மோதி கங்கை நதியில் வாகனம் விழுந்தது. இதனால் அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 3 பேரைத்தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் நிலச்சரிவில் வாகனம் ஒன்று கங்கை நதிக்குள் இன்று விழுந்தது. அந்த வாகனத்தில் 11 பேர் பயணம் செய்தார். இதில் ஐந்து பேர் உடனடியாக கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நதிக்குள் வாகனம் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன மூன்று பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முனி கி ரெட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரித்தேஷ் ஷா கூறுகையில்," மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. காவல் துறையுடன் மாநில பேரிடர் மீட்புப்படை பணியாளர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆற்றில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகனத்தில் இருந்த மற்ற பயணிகளைத் தேட டைவர்ஸ் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.
இதற்கிடையில் உத்தாரகண்ட்டில் நிலச்சரிவு, தீவிர வானிலை மற்றும வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து சுற்றுலாப்பயணிகளும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தியுள்ளார்.