மதுரை தக்காரின் பல கோடி ரூபாய் நிலம் போலி ஆவணம் மூலம் மோசடி: சார்பதிவாளர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது

மதுரை  தக்காரின் பல கோடி ரூபாய் நிலம் போலி ஆவணம் மூலம் மோசடி: சார்பதிவாளர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தென்காசியில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நிலத்தை பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் கருமுத்து கண்ணன்(69). மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரான இவர், சொந்தமாகக் கல்வி நிறுவனங்களையும் நடத்திவருகிறார். இவரது நிறுவனத்தின் மேலாளராக மதுரை கப்பலூரைச் சேர்ந்த சபாபதி(54) என்பவர் உள்ளார். இவர் தென்காசி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “கருமுத்து கண்ணன் குடும்பத்திற்குச் சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம், தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் உள்ளது. அந்த நிலத்திற்கு போலியாக இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை போலியாகத் தயாரித்து தென்காசி 1-ம் எண் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது ”என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட நில பகரிப்பு டிஎஸ்பி தெய்வம் நடத்திய விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த லலிதா என்பவர் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து இடத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. சுரண்டையைச் சேர்ந்த பவுன்ராஜ், தென்காசியைச் சேர்ந்த முகமது ரபீக், ஊத்துமலையைச் சேர்ந்த சோமசுந்தர பாரதி ஆகியோரும் இதில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதில் ஊத்துமலை தனசீலன், சுரண்டையைச் சேர்ந்த வடிவேலு ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்துப் போட்டுள்ளனர்.

இந்தக் கும்பலிடம் நடத்திய தொடர்விசாரணையில், தென்காசி ஒன்றாம் எண் சார்பதிவாளர் மணிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட நில அபகரிப்பு போலீஸார், சார்பதிவாளர் மணி, சோமசுந்தரபாரதி, தனசீலன், வடிவேலு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

அண்மையில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்தால், அதற்கு உடந்தையாக இருக்கும் சார்பதிவாளரும் கைது செய்யப்படலாம் என்னும் சட்டம் இயற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in