
கன்னியாகுமரியில் நில புரோக்கர் ஓட ஓட விரட்டிக் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த சொமேட்டோ உடை அணிந்த இருவரின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் கப்பியறை அருகே உள்ள புதுக்காடு செட்டிவிளைபகுதியைச் சேர்ந்தவர் சேவியர்பாபு(57). நில புரோக்கர். கடந்த சில மாதங்களுக்கு அவரது மனைவி இறந்து விட்டார். சேவியர்பாபுவின் இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் சேவியர் பாபு வசித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் செல்வராஜீடன் டூவீலரில் சேவியர்பாபு சென்று கொண்டிருந்தார். அப்போது சொமேட்டோ உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தின் உடையில் டூவீலரில் வந்த இருவர், சேவியர் பாவுவை வழிமறித்து தகராறு செய்தனர்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாபுவின் வயிற்றில் குத்தினர். இதைத்தடுத்த அவரது நண்பர் செல்வராஜீக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் உயிருக்குப் பயந்து சேவியர் பாபு டூவீலரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். ஆனால், சொமேட்டோ உடையில் வந்த இருவரும் அவரைத் துரத்தியுள்ளனர். ஆனால்,கத்திக்குத்து விழுந்ததால் ஓட முடியாமல் தவித்த சேவியர்பாபுவை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு இருவர் தப்பிச்சென்று விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே சேவியர்பாபு உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கத்திக்குத்து காயமடைந்த செல்வராஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேவியர்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் சொமேட்டோ உணவு டெலிவரி செய்யும் பை கிடந்தது. இக்கொலையில் ஈடுபட்டது சொமேட்டோவில் வேலை செய்பவர்களா அல்லது வழக்கை திசைதிருப்ப அந்த நிறுவன உடையில் வந்தவர்களா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலபுரோக்கர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.