லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்கிறார் மகள்: தந்தைக்கு மகள் ஆற்றும் நன்றி!

லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்கிறார் மகள்: தந்தைக்கு மகள் ஆற்றும் நன்றி!

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் ரோகினி ஆச்சார்யாவிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறவுள்ளார்.

பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான 74 வயதான லாலு பிரசாத் யாதவ், மூன்று முறை பிஹார் முதலமைச்சராக இருந்தவர். இவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த இவர் கடந்த மாதம் இந்தியா திரும்பினார்.

சமீபத்தில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மூத்த அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகள் ரோகினி ஆச்சார்யா, தனது சிறுநீரகத்தை தானமாக தரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த பதிலளித்த அவர் "ஆம், அது உண்மைதான். நான் விதியின் குழந்தை, என் சிறுநீரகத்தை அப்பாவுக்குக் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்

ரோகினி ஆச்சார்யா, கடந்த மாதம் ஒரு ட்வீட்டில், தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், "இந்த நாட்டிற்கு உங்கள் இருப்பு தேவை. இதன்மூலம் நாடு கொடுங்கோல் சிந்தனையை எதிர்த்துப் போராட முடியும்" என்று தெரிவித்திருந்தார்

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக டெல்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in