இன்னல்கள் நிறைந்த 2-வது இன்னிங்ஸ்: என்ன செய்யப்போகிறார் லாலு?

இன்னல்கள் நிறைந்த 2-வது இன்னிங்ஸ்: என்ன செய்யப்போகிறார் லாலு?

சிறைவாசம், மருத்துவமனைவாசம், ஓய்வு என 3 வருட வனவாசம் முடிந்து தாய்மண் திரும்பியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். பாட்னா திரும்பிய கையோடு அரசியல் களத்தில் சலசலப்பையும், குடும்பத்தில் வாரிசுகளுக்கு இடையே நிலவும் சஞ்சலத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு உருவாகியிருக்கிறது. எல்லாவற்றையும் தனக்கே உரிய அலட்சிய பாணியில் லாலு எதிர்கொள்கிறார் என்றாலும், நிலவரம் ரொம்பவே மாறியிருப்பது அவருக்கும் அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருப்பது என்னவோ உண்மை.

குறிப்பாக, அக்டோபர் 30-ல் தாராப்பூர், குசேஷ்வர் அஸ்தான் ஆகிய 2 தொகுதிகளிலும் நடக்கும் இடைத்தேர்தல், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் அரசியல் பாதையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்ப யுத்தம்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திஹார் சிறையில் இருந்த லாலு, ஜாமீன் கிடைத்த பின்னரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், டெல்லியில் தனது மகள் மிசா பாரதியின் வீட்டில் ஓய்வெடுத்துவந்தார். பிஹார் மாநிலத்தின் மிக முக்கியத் தலைவரான லாலு, எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்புகள் உச்சமடைந்த நிலையில், அக்டோபர் 24-ல் அவர் பாட்னாவைச் சென்றடைந்தார். அவரை வரவேற்க அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவும், தேஜ் பிரதாப் யாதவும் விமான நிலையத்துக்குச் சென்ற நிலையில், தந்தையிடம் அதிகம் பேச விடாமல் தேஜஸ்வியின் ஆதரவாளர்களால் தேஜ் பிரதாப் தடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், தேஜஸ்வியின் அரசியல் ஆலோசகர் சஞ்சய் யாதவ் ஆகியோர் மீது தேஜ் பிரதாப் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

தனது தந்தை லாலு பிரசாத் தனது வீட்டுக்கு வந்து சில நிமிடங்களாவது இருக்க வேண்டும் என்று விரும்பிய தேஜ் பிரதாப், அதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டிவந்தது. பின்னர் காரில் தனது வீட்டுக்கு வந்த லாலுவை வரவேற்று சந்தோஷத்தில் திக்குமுக்காடினார் தேஜ் பிரதாப். முன்னதாக, லாலுவை வரவேற்க தனது வீட்டை மட்டுமல்லாமல் தெருவையே சுத்தம் செய்து அலங்கரித்து வைத்திருந்தார். தந்தை காரில் வந்ததும், காரில் வைத்தே அவருக்குப் பாதபூஜை செய்தார். முதலில் பாலிலேயே தந்தைக்குப் பாதபூஜை செய்ய விரும்பிய தேஜ் பிரதாப், லாலு அதை விரும்பாததால் தண்ணீரைக் கொண்டு அவரது பாதங்களைக் கழுவினார். எனினும், தந்தையின் ஆசீர்வாதம் அவருக்குக் கிட்டவில்லை.

தந்தையின் வருகை குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த தேஜ் பிரதாப், தனக்குத் தொடர்ந்து நிகழ்ந்த புறக்கணிப்புகளால் ஏமாற்றம் அடைந்தார். தன் மனக்குமுறல்களைச் செய்தியாளர்களிடம் கொட்டித்தீர்த்தார். “என் தம்பி தேஜஸ்வி முதல்வர் பதவியில் அமர்வதையே விரும்புகிறேன். ஆனால், நிலைமை இப்படியே சென்றால் அவரால் முதல்வராக முடியாது” என்றெல்லாம் புலம்பினார். தாய், தந்தை, தம்பி என மொத்த குடும்பமும் தன் விஷயத்தில் பாராமுகத்துடன் நடந்துகொள்வது அவரை ரொம்பவே வருத்தியிருக்கிறது. “அப்படியெல்லாம் யார் மீதும் எனக்குக் கோபம் இல்லை. இருவரும் என் பிள்ளைகள்தான்” என்று லாலு சொன்னாலும், அரசியலிலும் பெரிய அளவில் சோபிக்காமல், சொந்த வாழ்விலும் தோல்வியைச் சந்தித்திருக்கும் மூத்த மகன் மீதான அவரது அதிருப்தி தெளிவாகவே வெளிப்படுகிறது. தனது அண்ணனின் தர்ணா போராட்டம் குறித்து தேஜஸ்வியும் கருத்து சொல்ல விரும்பவில்லை. பொதுக்கூட்ட மேடையாகட்டும், செய்தியாளர் சந்திப்பாகட்டும் அறிவார்த்தமாக நிதானத்துடன் பேசும் தேஜஸ்விக்கு, அவரது அண்ணன் தேஜ் பிரதாப் எந்த வகையிலும் இணையாக மாட்டார். எனவே, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுவரும் தேஜ் பிரதாப்பை யாரும் கண்டுகொள்ளாததில் வியப்பில்லை.

லாலு குடும்பத்தில் நிகழும் இந்தக் குழப்பத்தை பாஜக தனது பாணியில் அரசியல் செய்கிறது. “ஆர்ஜேடி கட்சியினரால் லாலுவின் மூத்த மகன் புறக்கணிக்கப்படுகிறார். அரசியல் முதிர்ச்சி கொண்ட அவர் மனநிலை சரியில்லாதவர்போல் நடத்தப்படுகிறார். அவருக்கு எதிராகச் சதி நடக்கிறது” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் தன் பங்குக்குக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

காங்கிரஸ் - ஆர்ஜேடி விரிசல்

தாராப்பூர், குசேஷ்வர் அஸ்தான் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் கலந்தாலோசிக்காமல் ஆர்ஜேடி தனது வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸை அதிர்ச்சியடையச் செய்தது. ஆர்ஜேடிக்கும் பாஜகவுக்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதாக, மாநிலக் காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த லாலு பக்த சரண் தாஸை 'பக்சோன்ஹர்' (உள்ளூர் மொழியில் 'முட்டாள்') என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பக்த சரண் தாஸை, லாலு தவறான வார்த்தைகளால் விமர்சித்ததாகக் காங்கிரஸ் கொந்தளித்தது.

“வேண்டுமென்றே இப்படி அவர் பேசியிருந்தால், மக்கள் முன்னிலையில், பட்டியலினச் சமூகத்தினர் முன்னிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். முதுமையின் காரணமாக இப்படிப் பேசுகிறாரா என்று தெரியவில்லை” என்றி பிஹார் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதையடுத்து ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டதா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

காங்கிரஸைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் சுமையாகவே மாறிவருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் 70 இடங்களில் போட்டியிட்டு, 19 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸ், தேஜஸ்வி யாதவின் முதல்வர் கனவுக்கு வேட்டு வைத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் பிடிவாதம் பிடித்த நிலையில், சிறையில் இருந்த லாலுவிடம் பஞ்சாயத்து போனது. இதுதொடர்பாக ஆர்ஜேடி முகாமில் அதிருப்தி நிலவிவந்த நிலையில்தான், சமீபத்தில் கசப்புணர்வுகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால், தனியாகப் போட்டியிட்டு ஆர்ஜேடி என்ன சாதித்தது என்று இன்று கேள்வி எழுப்புகிறது காங்கிரஸ். பதிலடியாகக் காங்கிரஸின் தவறுகளை ஆர்ஜேடி கட்சியினர் பட்டியலிடுகிறார்கள்.

சித்தாந்த ரீதியில் பாஜகவுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் லாலு பிரசாத். அதேபோல், காங்கிரஸுடனான ஆர்ஜேடியின் பிணைப்பும் நீண்ட வரலாறு கொண்டது. அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தி அவரைக் கைதுசெய்த லாலுவின் துணிச்சல், காங்கிரஸ் முகாமில் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் கட்சிக்கு லாலு துணை நின்றிருக்கிறார். சோனியா காந்தி வெளிநாட்டவர் என விமர்சனங்கள் எழுந்தபோது, சோனியா இந்தியாவின் மருமகள் என்று குரல் கொடுத்தவர் லாலு.

பிஹாரில் நீண்டகாலம் செல்வாக்குடன் இருந்த கட்சி காங்கிரஸ். 1975-ல் இந்திரா காந்தி அரசு அமல்படுத்திய நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, 1977-ல் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதாவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதன் பின்னர் 1980-ல் நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இப்படியாக, 1990-ல் லாலு முதன்முறையாக முதல்வரானதற்கு முன்புவரை காங்கிரஸின் கரம்தான் ஓங்கியிருந்தது. ஜனதா தளத் தலைவராக வளர்ந்து, பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைத் தொடங்கி பிஹாரில் செல்வாக்கு மிக்கத் தலைவராக லாலு உருக்கொண்டார். கூடவே பாஜகவும் சமதா கட்சியும் அங்கு வளர்ச்சி கண்டன. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும், நிதீஷ் குமாரும் இணைந்து தொடங்கிய சமதா கட்சி பின்னர் லோக் சக்தி, சரத் யாதவ் தலைமையிலான ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளமானது. இதையடுத்து, பிஹாரில் தனது செல்வாக்கைக் காங்கிரஸ் இழந்துவிட்டது. இப்போது தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள அக்கட்சி விரும்புகிறது. அதற்காகவே தனக்கென தனிவழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அத்துடன், காங்கிரஸில் இணைந்திருக்கும் கன்னையா குமார், இளம் வாக்காளர்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் குறைத்துவிடுவார் எனும் எண்ணம் தேஜஸ்விக்கு இருக்கிறது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக அதிரடியாகப் பேசும் கன்னையா குமார் தனக்குப் போட்டியாளராக வருவார் என்பதால், அவரை அருகில் வைத்துக்கொள்ள தேஜஸ்வி விரும்பவில்லை.

இப்படிப் பல காரணங்களால் காங்கிரஸும் ஆர்ஜேடியும் பரஸ்பரம் விலக ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முன்னர், பல முறை விலகிச் சேர்ந்த கட்சிகள்தான் இவை இரண்டும். பின்னர், அரசியல் சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்கள் காரணமாக உறவு மீண்டும் முகிழ்த்ததுண்டு.

தற்போது ஆர்ஜேடியுடன் கூட்டணி கிடையாது என்று பிஹார் காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் பிஹாரில் தனித்துப் போட்டியிடும் என்று அவர் சொல்லியிருப்பது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாருடன் லாலு கைகோர்ப்பாரா என்று எழுந்திருந்த ஊகங்கள் தகர்ந்திருக்கின்றன. 16 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமார் பிஹாருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் என்று ஆர்ஜேடி கட்சியினர் விமர்சிக்கிறார்கள். நிதீஷ் குமாரோ, லாலு குடும்ப ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துவருகிறார்.

லாலுவின் உடல்நிலை ஒத்துழைக்கும் பட்சத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுமை காரணமாகவும், நோய்மை காரணமாகவும் அவரது உச்சரிப்பில், உடல்மொழியில் தடுமாற்றம் தெரிகிறது. எனினும், அவர் வந்து நின்றாலே போதும் என ஆர்ஜேடி தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்.

நவம்பர் 2-ல் பிஹார் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், ஆர்ஜேடி கட்சியின் பலம் அதிகரித்திருக்கிறதா, காங்கிரஸின் செல்வாக்கு துளிர்த்திருக்கிறதா எனத் தெரியவரும். கூடவே, பிஹார் அரசியல் களம் செல்லும் பாதை என்ன என்பதும் உறுதியாகிவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in